மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா மீது கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, வியாழக்கிழமை அன்று மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 245 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறியது.
இதனையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால் முத்தலாக் தடை மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்த பிறகே நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். முத்தலாக் மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எதிர்கட்சிகள் தான் முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், பிஜேபி கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
மாநிலங்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்தியிருந்தால், அந்த மசோதாவுக்கு வாக்களிக்க மாட்டோம். எங்கள் உறுப்பினர்கள் அந்த மசோதாவை ஆதரிக்க மாட்டார்கள் என பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு) மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
இதுக்குறித்து ஜே.டி.யு கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான வசிஷ்ட் நாராயண் சிங் கூறியதாவது, முத்தலாக் தடை மசோதா மிக அவசரமாக நிறைவேற்றப்படுகிறது. இந்த நேரத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் இந்த மசோதாவை குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னரே எங்கள் கட்சி ஆலோசனை செய்யும். முத்தலாக் தடை மசோதாவுக்கு அவசரம் காட்டினால், எங்கள் கட்சி மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கும்.
நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, இந்த மசோதாவில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகையில் சட்டம் உள்ளது. தண்டனை காலத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அதே நேரத்தில், முஸ்லீம் சமூகத்தினரிடமும் இந்த மசோதா குறித்து பேசியிருக்க வேண்டும் என்றும் ஜே.டி.யு. கட்சி நினைக்கிறது. அதனால் தான் முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை பிஜேபி கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி.