"ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் ராகுல் காந்தியை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்

ராகுல் காந்தியின் "ரேப் இன் இந்தியா" அறிக்கை பெண்களின் மரியாதையையும் கண்ணியத்தையும் புண்படுத்தி உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 13, 2019, 06:44 PM IST
"ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் ராகுல் காந்தியை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன் title=

புதுடெல்லி: "ரேப் இன் இந்தியா" தொடர்பான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Rahul gandhi) அறிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "ராகுல் காந்தியின் இந்த அறிக்கை பெண்களின் மரியாதையையும் கண்ணியத்தையும் புண்படுத்தும். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெண்களின் கவுரவத்தை பற்றி பேசுவது வெட்கக்கேடானது. 

முன்னதாக, ராகுல் காந்தியின் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி "இந்திய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு தலைவர் கூறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. காங்கிரஸ் தலைவர்கள் கற்பழிப்பு தொடர்பாக அரசியல் செய்கிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார். மேலும் ராகுலுக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவும் ராகுலின் தாயும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியை ஸ்மிருதி வலியுறுத்தி பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்மிருதி கோரினார். 

நேற்று (வியாழக்கிழமை) ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமரின் திட்டமான "மேக் இன் இந்தியா" திட்டத்தை குறிவைத்து பேசிய போது, முன்பு அது "மேக் இன் இந்தியா" தற்போது அது "ரேப் இன் இந்தியா" என மாறியுள்ளது. இப்போது இந்தியாவில் கற்பழிப்பு தான் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில், நரேந்திர மோடியின் எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய பாஜக எம்.பி. முயற்சித்தார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் பிரதமர் பேசவே மாட்டார். தேசம் தனது மகள்களை "பாஜகவின் சில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து" காப்பாற்ற வேண்டும். தற்போது நாடு "ரேப் இன் இந்தியா"வாக மாறி வருகிறது என கடுமையாக பாஜக அரசை சாடினார்.

இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், குறிப்பாக மக்களவையிலும் ராகுல் காந்தியின் அறிக்கை குறித்து பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக எம்.பி.க்கள் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷங்களையும் எழுப்பினர்.

அதேபோல ராஜ் சபையில் எம்.பி.க்கள் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு கூறுகையில், இந்த சபையில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் பெயரை நீங்கள் கூறி கோசங்களை எழுப்ப முடியாது. சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க யாருக்கும் உரிமை இல்லை என பாஜக எம்.பி-க்களை எச்சரித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில், ராகுல் காந்தியின் அறிக்கை எனக்கு காயம் ஏற்படுத்தி உள்ளது, அது நாடு முழுவதும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றார். அத்தகைய சொற்களைப் பயன்படுத்தும் ஒருவர் சபைக்கு வர முடியுமா? அவர்கள் இந்த சபைக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

"ரேப் இன் இந்தியா" தொடர்பான விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி "மன்னிப்பு கேட்க மாட்டேன்" தற்போது நடந்து வரும் முக்கிய பிரச்சினைகளிலிருந்து (குடியுரிமை திருத்த மசோதா) கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிப்பதா" குற்றம் சாட்டினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News