மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- மியான்மர் அதிபர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தது பெருமையளிக்கிறது. அதிபரையும் அவரது குழுவினரையும் வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். மியான்மர் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளின் சிறப்பு பெற்றது. உங்களது நாடு சிறப்பான சகாப்தத்தை துவங்கியுள்ளது. இந்த சகாப்தம் உங்களின் தலைமையில் முதிர்ச்சி பெறுவதுன், ஜனநாயகம் மீதான உங்கள் நடவடிக்கையில் இந்திய மக்கள் நண்பர்களாகவும் கூட்டாளியாகவும் ஒன்றாக இருந்து ஆதரவு தருவார்கள்.
நமது மக்களின் பாதுகாப்புக்கு இரு அரசும் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளது. இரு நாடுகளுக்க இடையிலான இணைப்பு, உள்கட்டமைப்பு, கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நமது பங்களிப்பு வலுப்படுத்தப்படும். இரு நாடுகளுக்கு இடையேயான பழமைவாய்ந்த கலாசாரம் மற்றும் வரலாற்று தொடர்புகள் நமது உறவை வலுப்படுத்தும். மியான்மரின் பகன் நகரில் உள்ள அனந்தா கோயில் நமது உறவை மீண்டும் புத்துயிர் பெற செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இரு நாட்டு உறவை இன்னும் புதிய உயரத்திற்கு எடுத்து செல்ல உங்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளேன். இந்த பிராந்தியத்தில் உள்ள சவால்கள் குறித்து இரு நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். மியான் மாரின் சிறந்த எதிர்காலம் என்பது உங்களின் நோக்கம் மட்டுமல்ல. நமது விருப்பம். இந்தியா மியான்மர் இடையேயான உறவு வலுவான வளர்ச்சி ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டது. இது மக்களே முதன்மையானவர்கள் என்ற கொள்கையை விளக்குகிறது எனக்கூறினார்.
பின்னர் மியான்மர் அதிபர் பேசுகையில்:- ஒட்டு மொத்த சமூக வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய இரு நாடுகளும் தங்களது ஒத்துழைப்பை பலப்படுத்த ஒத்துக்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தலைவர்கள் வந்து செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறினார்.