இடைவிடாது பெய்யும் மழை; போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மும்பையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு!! 

Last Updated : Sep 5, 2019, 08:12 AM IST
இடைவிடாது பெய்யும் மழை; போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! title=

மும்பையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு!! 

மும்பை: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பையில் பல்வேறு புறநகர்ப்பகுதிகளில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. மத்திய மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடாவிலும் அதிக மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தம் உருவாகும்போது அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை, தானே, பால்கர், ராய்காட் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்று MET துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. IMD-யின் கனமழை முன்னறிவிப்பு காரணமாக, மாநில அரசு பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை நேற்றும் நீடித்தது. வடாலா, அந்தேரி, சயான், கிங்சர்க்கிள், பரேல், தாதர், பைக்குலா, மலாட், போரிவிலி, ஜோகேஸ்வரி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நவிமும்பை பகுதியில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் நடந்து சென்றனர்.

மித்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குர்லா பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கிய 1,300 பேரை பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுவந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 30 சென்டிமீட்டருக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்ததால், தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் மின்சார ரயில் போக்குவரத்து பலமணி நேரம் பாதிக்கப்பட்டது. மும்பையில் இருந்து புறப்படும் ரயில்கள் தாமதமாகின. விரார், வசாய் , மாதுங்கா, குர்லா ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கியதால் ஏராளமான ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. 

கனமழை நீடித்ததால் மும்பையில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 280 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதனிடையே, இன்றும் பலத்த மழை பெய்யும் என்று மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் மாதம் முழுவதும் பெய்யக்கூடிய மழை இந்த இரண்டு நாட்களில் பெய்துள்ளதாக மும்பை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், போக்குவரத்து பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News