தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2019, 06:57 PM IST
தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் title=

புதுடெல்லி: நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு சார்பாக பல மசோதாக்கள் கடும் எதிர்ப்புக்களுக்கிடையே தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில், பெரிய விவாதத்தை ஏற்படுத்திய மசோதாக்களில் ஒன்றான தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

மருத்துவ துறையில் பல மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுக்கும் அதிமுகவும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவை எதிர்த்த போதிலும், மக்களவையில் போதிய அளவுக்கு பெரும்பான்மையை பெற்ற என்.டி.ஏ அரசு, மசோதா நிறைவேற்றியது. அதாவது இந்த மசோதாவுக்கு ஆதரவாக 260 பேரும், எதிர்த்து 48 பேரும் ஓட்டு போட்டனர்.

இதனையடுத்து இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் மருத்துவக் கல்வியில் பொதுவான தரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அவசரமாக மருத்துவக் கவுன்சில் சட்டத்தைத் திருத்துவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டினர். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் மருத்துவக் கல்வியில் இடம்பெறுவதைத் தடுக்கவும், இச்சட்டம் பயன்படும் என்றும், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை திணிப்பதற்காக, இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் குற்றம்சாட்டினர்.  

இந்நிலையில், இன்று மருத்துவர்கள் போராட்டத்தை மீறி தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து சில திருத்தங்கள் செய்து தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் திருத்தம் செய்யபட்டு உள்ளதால், மீண்டும் என்.எம்.சி மசோதா மக்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்த பின் இது சட்டமாகும்.

Trending News