மகாராஷ்டிராவின் முஸ்லீம் சமூகத்தினரும் 5 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கையை முன்வைத்துள்ளன
மகாராஷ்டிர மாநிலத்தின் அரசுப் பணி மற்றும் கல்வி துறையில் எங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என மராத்தா சமூகத்தினர் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் செய்து போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலைகளில் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தினார்கள். வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது.
அவுரங்காபாத் மாவட்டம் காய்காவ் கிராமத்தில் நடந்த மறியல் போராட்டத்தின் போது, மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கோதாவரி ஆற்று பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினர். அப்பொழுது திடிரென 28 வயது உடைய காகாசாகேப் ஷிண்டே என்ற வாலிபர் கோதாவரி ஆற்றில் குதித்தார். உடனே அவர் மீடக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மராத்தா சமூகத்தினர், இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா தொண்டர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். பல இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், இதன் காரணமாக பண்டர்பூர் செல்ல இருந்த தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் வாழும் முஸ்லிம் சமூகத்தினர் தங்களுக்கும் ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளன. ஏற்கனவே இட ஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தினரும் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளதால், பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
மாநிலம் முழுவதும் போலீசார் உசார் படுத்தப்பட்டு உள்ளனர்.