புதுடெல்லி: பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் மாற்றி கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும் அரசாங்கத்தின் அறிவிப்பு படி நபர் ஒருவர் 4000 ரூபாய் வரையிலான கையிருப்புத் தொகையை வங்கிகளில் நேரடியாகச் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக வங்கிகள் இன்று திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள வங்கிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஏடிஎம், பெட்ரோல் பங்குகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மதர் டைரி மற்றும் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கொல்கத்தா, சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். போலீஸ் பாதுகாப்பு காலை 9 மணி முதல் தொடங்கியது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் இன்று அறிமுகம் செய்ய உள்ளது. இதனையடுத்து இன்று வங்கிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட உள்ளதாகவும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலும் வங்கிகள் திறக்கப்பட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இன்று மாலை 6 மணி வரை, வங்கி நீட்டித்து திறந்த இருக்கும் என்று அறிவித்துள்ளது. மற்ற வங்கி 7 மணி வரை திறந்த தயாராகி உள்ளனர்.