கொரோனா வைரஸ்: கேரளாவில் 3-வது நபருக்கு வைரஸ் தொற்று உறுதி!

சீனாவின் வுஹானிலிருந்து நோயாளி திரும்பிய கொரோனா வைரஸின் மூன்றாவது வழக்கை கேரளா இப்போது உறுதிப்படுத்துகிறது!!

Last Updated : Feb 3, 2020, 02:38 PM IST
கொரோனா வைரஸ்: கேரளாவில் 3-வது நபருக்கு வைரஸ் தொற்று உறுதி! title=

சீனாவின் வுஹானிலிருந்து நோயாளி திரும்பிய கொரோனா வைரஸின் மூன்றாவது வழக்கை கேரளா இப்போது உறுதிப்படுத்துகிறது!!

சீனாவின் ஹூபே மாகாணம், வுஹான் நகரில் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 361 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளத்தில்தான் உறுதிசெய்யப்பட்டது. கொரோனா வைரஸ் உருவானதாகக் கருதப்படும் சீனாவின் வூகான் நகரில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று கடந்த 30 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டு திருச்சூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டாவதாக நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அவர் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மூன்றாவதாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். வூகானில் இருந்து திரும்பிய அந்த மருத்துவ மாணவர், தற்போது, காசர்கோடு மாவட்டத்தில் கஞ்சன்காடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார்.

கேரளாவில் 3 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் மேலும் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சீனாவில் இருந்து திரும்பிய 1924 பேர் கேரளாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிப்பு அறிகுறிகள் ஏற்படுகின்றனவா என்பதை கண்டறிய 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். இருப்பினும் சீனாவில் இருந்து திரும்பியவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பில் இருப்பவர்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்காமல் வெளியே செல்லக்கூடாது என்றும், குடும்பங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இருந்தால் அவற்றை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அச்சப்பட ஏதுமில்லை என்றாலும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் கே.கே.ஷைலஜா குறிப்பிட்டுள்ளார்.  

Trending News