பெங்களூரு: கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால், கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
கடந்த 2018 மே 12 ஆம் தேதி தேர்தல் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜ 104, காங்கிரஸ் 79, மஜத 37 மற்றும் சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், யார் ஆட்சி அமைப்பார்கள் என குழப்பம் நீடித்தது.
அந்த நேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று எடியூரப்பா தலைமையிலான பாஜக கோரிக்கை வைத்தது. அதேவேளையில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்தது. இதனால் எங்களுக்கு தான் பெரும்பான்மை இருக்கிறது. எங்களை தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என மஜத - காங்கிரஸ் கூட்டணி கோரிக்கை வைத்தது. ஆனால் அப்பொழுது ஆளுநரும் பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார். கர்நாடகா முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார்.
இதனை எதிர்த்து மஜத - காங்கிரஸ் கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பெரும்பான்மையை நிருப்பிக்க வேண்டும் என எடியூரப்பா தலைமையிலான பாஜகவுக்கு உத்தரவிட்டது. ஆனால் சட்ட பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி மஜத - காங்கிரஸ் கூட்டணி தலைமையில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்பட்டது. எச். டி. குமாரசாமி கர்நாடகா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் மாநில அமைச்சரவையில் இடம் பெறாத காரணத்தால், அவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் அரசுக்கு அடிக்கடி நெருக்கடிகள் தருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதுவும் மக்களவை தேர்தலின் படுதோல்விக்கு பிறகு, மஜத - காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்தநிலையில், இன்று மேலும் 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் சபாநாயகர் ரமேஷ் குமாரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக ஆளும் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.