ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
ஆந்திரா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி 150-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது.
இதேபோல் மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம் மக்களவையில் நான்காவது மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக YSR காங்கிரஸ் கட்சி உயர்ந்தது.
இந்நிலையில் தற்போது மக்களவையின் துணை சபாநாயகர் பதவியை ஆந்திர மாநிலத்தின் YSR கட்சிக்கு தர பாஜக முன்வந்ததாகவும், YSR காங்கிரஸ் கட்சி இதனை ஏற்க மறுத்ததாகவும் தெரிகிறது. YSR காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் இச்செய்தி குறித்து தெரிவிக்கையில்., ‘எங்கள் கட்சிக்கு எந்த பதவியும் தேவையில்லை. அப்படி பெற்றுக்கொண்டால் ஆட்சியில் பங்குப் பெற்றதாக பார்க்கப்படும்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வரை எந்த பதவியும் வேண்டாம். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் இருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்தான் காரணம்.
இரண்டாக பிரிக்கப்பட்ட மாநிலம் இது. ஆனால், இன்னும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. எனவே காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளில் இருந்தும் விலகி இருக்க விரும்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.