புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மசோதா மீதான விவாதங்கள் இறுதியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் எல்லைக்குள் எந்தவொரு முடிவையும் எடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு அனைத்து உரிமையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நிலைமை இயல்பானதாக மாறினால், முழு மாநில அந்தஸ்தை வழங்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று, நாட்டின் மக்களுக்கும் முக்கியமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்று அமித் ஷா கூறினார்.
இதனைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்பொழுது மசோதாவுக்கு ஆதரவாக 370 ஓட்டும், எதிராக 70 ஓட்டும் கிடைத்தது. இதன் மூலம் மக்களவையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதால், இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்த குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று. பின்னர் சட்டமாகும். இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தும்.