மணிப்பூரின் இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் இரோம் சர்மிளா 2000-ம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்க்கொண்டார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் மூக்கு வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையே சிறைச்சாலை போல் ஆகிவிட்டது.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு, தான் உண்ணாவிரதத்தை கைவிட்டு அரசியலில் குதித்து ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி போராடப்போவதாகவும், மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் சர்மிளா அறிவித்தார்.
அதன்படி இன்று மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது உண்ணா விரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இரோம் சர்மிளா தெரிவித்தார். இதையடுத்து 10 ஆயிரம் சொந்தப்பிணையில் இரோம் சர்மிளாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மணிப்பூரில் ஜனநாயகம் இல்லை. எனவே அரசியலில் ஈடுபட உள்ளேன் நான் அரசியலில் ஈடுபடுவதை சிலர் ஏன் தடுக்கிறார்கள் என புரியவில்லை. இரும்புப் பெண் என கூறப்படுவதற்கு ஏற்ப நான் வாழ விரும்புகிறேன். மணிப்பூர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மணிப்பூரின் முதல்வர் ஆவதே தமது இலக்கு என அறிவித்தார். ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை அகற்றப்பட வேண்டும். நான் மணிப்பூரின் முதல்-மந்திரி ஆனால் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கவிடுவேன்.
இந்த நீண்ட நாள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளதன் மூலம் தாம் வேறு பாதையை தேர்ந்தெடுக்க போகிறேன், ஆனால் பாதை மாறுகிறதே தவிர லட்சியத்தில் எந்த வித மாற்றம் இல்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
#WATCH: Irom Sharmila ends her fast after 16 years. She was on hunger strike, demanding repealing of AFSPA.https://t.co/ndGmoEuZu8
— ANI (@ANI_news) August 9, 2016