அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்யும் பலத்த மழையால் மாநிலம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 22 மாவட்டங்கள் வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அசாம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெள்ளப்பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தவாறு பார்வையிட்டார். நிவாரண முகாம்களையும் பார்த்தார். அவருடன் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பார்வையிட்டனர். இதன்பிறகு கவுகாத்தியில் முதல்-மந்திரி கோனோவாலுடன் வெள்ளச் சேதம் குறித்து ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.