தற்போது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா வசித்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிஜேபியுடன் சேர்ந்து சிவசேனா கட்சி போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனா. சிலநாட்களுக்கு முன்பு 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனவும் அறிவித்தது. இதனையடுத்து சிவசேனாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டு வந்தது.
சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நாங்கள் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. யாருக்கு எங்களுடன் கூட்டணி குறித்து பேச விருப்பமோ அவர்கள் முதலில் வரட்டும். மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் பாஜகவும், சிவசேனாவும் சகோதரர்களாக இருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிராவில் நாங்கள் பெரிய சகோதரர்களாக இருக்கிறோம். எப்போதும் நாங்கள் தான் அண்ணன். மாநிலத்திலும், தேசிய அரசியலிலும் முழு கவனம் செலுத்துவோம் எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து, நம்முடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றால் பிரச்சனை இல்லை. கூட்டணிக்கு யாரையும் வலுகட்டாயமாக இழுக்கவில்லை. நாங்கள் தேர்தலை தனியாகச் சந்திப்போம் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியிருந்தார்.
இதன்மூலம் சிவசேனா மற்றும் பாஜக இடையே பெரும் விரிசல் ஏற்ப்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஆனால் கடந்த வாரம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், சிவேசனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். இதனையடுத்து இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து பேச உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.