நோய்டா: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) 45 வயதான ஜூனியர் விஞ்ஞானி ஒருவர் ஹனி ட்ராப் (Honeytrap) செய்யப்பட்டு, அதாவது ஆசை காட்டி சிக்க வைக்கப்பட்டு, சனிக்கிழமை (செப்டம்பர் 26) ஒரு நோய்டா (Noida) ஹோட்டலில் பிணைக் கைதியாக்கப்பட்டார். அவரை ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் மீட்டனர். கடத்தல் தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கௌதம் புத் நகர் போலீஸ் கமிஷனர் அலோக் சிங் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கிய மீட்பு நடவடிக்கையை கண்காணித்தார். பத்து லட்சம் ரூபாய் கொட்டுத்தால்தான் விஞ்ஞானி (Scientist) விடுவிக்கப்படுவார் என தங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவரது குடும்பத்தினர் காவல்துறையினரை அணுகினர். இதற்குப் பிறகு காவல் துறை நடவடிக்கையில் ஈடுபட்டது.
"அவர் செக்டர் 41 இல் உள்ள OYO ஹோட்டலில் ஒரு அறையில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை அவர் மீட்கப்பட்டார்" என்று நொய்டாவின் கூடுதல் போலீஸ் கமிஷனர் ரன்விஜய் சிங்கை மேற்கோளிட்டு PTI தெரிவித்தது. தீபக் குமார், சுனிதா குர்ஜர் மற்றும் ரிங்கு எனப்படும் ராகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடத்தலில் (Kidnap) ஈடுபட்ட இன்னும் இரண்டு கூட்டாளிகள் தலைமறைவாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
ALSO READ: Coimbatore Horror: பெண்ணே ஜாக்கிரதை, நண்பன் என்ற பெயரில் நரிகள் நடமாடும் உலகம் இது!!
ரிங்கு என்றழைக்கப்படும் ராகேஷ் குமார் OYO ஹோட்டலின் ஆபரேட்டர் ஆவார். அங்குதான் விஞ்ஞானி பிணைக் கைதியாக வைக்கப்பட்டு, கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டார்.
‘நொய்டா செக்டர் 77 இல் வசிக்கும் விஞ்ஞானி, சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீட்டிற்கு சில பொருட்களை வாங்க நொய்டா சிட்டி செண்டருக்கு செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பினார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. பின்னர், விஞ்ஞானி கடத்தப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டுமானால், பத்து லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கணவரின் உயிருக்கு ஆபத்து வரக்கூடுமோ என்ற அச்சத்தில் அவரது மனைவி உடனடியாக இதைப் பற்றி போலிசுக்கு தகவல் அளிக்கவில்லை. மனைவிக்குத் தெரியாமல், அந்த விஞ்ஞானி ஒரு ஆன்லைன் 'மசாஜ் பார்லரை' (Massage Parlour) பற்றி தேடியுள்ளது தெரியவந்துள்ளது. அதில் அவர் ஒரு நபருடன் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர் சனிக்கிழமை மாலை நொய்டா சிட்டி செண்டரில் தன்னைச் சந்திக்க வருமாறு விஞ்ஞானியை அழைத்துள்ளார். விஞ்ஞானி அங்கு சென்றவுடன் அங்கிருந்து அவர் கடத்தப்பட்டார்’ என்று போலீசார் (Police) தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை விஞ்ஞானியின் மனைவி செக்டர் 49 காவல் நிலையத்தை அணுகியதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். அதன்பிறகு போலீஸ் அதிகாரிகள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து விஞ்ஞானியை மீட்பதற்காக விசாரணையைத் தொடங்கினர்.
மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும், சில மணி நேரத்திற்குள் குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.