குஜராத் ராஜ்யசபா தேர்தலில் தோற்கப் போகும் அகமது படேலுக்கு ஓட்டு போடவில்லை என காங்கிரசிலிருந்து விலகிய சங்கர் சிங் வகேலா இன்று கூறியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இன்று தனது ஓட்டை பதிவு செய்த பின்னர் காங்கிரசிலிருந்து விலகிய சங்கர் சிங் வகேலா அளித்த பேட்டி:-
தோற்க போகும் வேட்பாளருக்கு யார் ஓட்டு போடுவார்கள். நான் அகமது படேலுக்கு ஓட்டுப்போடவில்லை. அவருக்கு 40 ஓட்டுகள் கூட கிடைக்காது. அவர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. காங்கிரசில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் கூட அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். படேல் சமுதாயத்தினரை வைத்து காங்கிரஸ் விளையாட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
அகமது படேல் கூறுகையில், வெற்றி உறுதி என்பதில் எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கை உள்ளது. முடிவு வரும் வரை பொறுத்திருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.