என்.எஸ்.ஜி: சீனாவால் இந்தியாவுக்கு பின்னடைவு

Last Updated : Jun 20, 2016, 04:41 PM IST
என்.எஸ்.ஜி: சீனாவால் இந்தியாவுக்கு பின்னடைவு title=

சியோலில் அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தின் போது இந்தியாவுக்கு அணு சக்தி வினியோக குழுவில் இடம் அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படாது என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இணைய இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. சீனா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தியா என்.எஸ்.ஜி.,யில் சேர சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியதாவது:- அணுசக்தி வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் இந்தியா இடம்பெறுவது தொடர்பாக சியோலில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட மாட்டாது என்று சீனா தெரிவித்துள்ளது. அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை இந்த அமைப்பில் இணைப்பது என்பது குழுவில் உள்ள அனைத்து நாடுகளுடைய ஒப்புதலுக்கு பிறகே எடுக்கப்படவேண்டும். இந்த நிலைப்பாடு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது இல்லை. அணு ஆயுத பரவல் ஒப்பந்த்தில் கையெழுத்திடாத அனைத்து நாடுகளும் இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அணு ஆயுத சப்ளை குழுவில் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற இந்தியாவின் கனவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Trending News