உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
டெல்லி: மறு உத்தரவு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய தொழில்வர்த்தகத்துறை அமைச்சகம் வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடை உடனடியாக அமலுக்கு வந்தது.
வெங்காயம் உற்பத்தியில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. கன மழையால், இம்மாநிலங்களில், வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயம் அறுவடை தாமதமாகும் வாய்ப்புள்ளது. தற்போது, பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தை பதுக்கி, அவற்றை கூடுதல் விலைக்கு விற்கும் நடவடிக்கைகளை, மொத்த வியாபாரிகளும், 'ஆன்லைன்' வர்த்தகர்களும் துவக்கியுள்ளனர். இதனால், நாடு முழுவதும், வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக டெல்லி மாநில அரசு சார்பில் நடமாடும் வாகனங்கள் மற்றும் ரேசன் கடைகளில் ரூபாய் 24-க்கு வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் மாநில அரசுகள் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், உள்நாட்டில், வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவர, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.