அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சர்பானந்த சோனோவால் இன்று மாலை பதவியேற்றார்.
அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 60 இடங்களும், அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கணபரிஷத் கட்சிக்கு 14 இடங்களும், போடோ மக்கள் முன்னணிக்கு 12 இடங்களும் கிடைத்தன.
அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் பி.பி.ஆச்சாரியா அவர்கள் சோனோவாலுக்கும் அவருடன் பதவியேற்ற மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து பாஜக தலைவர் சர்பானந்த சோனோவால் அஸ்ஸாம் முதல்வராக இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். இவர் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற முதல் பாஜக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்பானந்த சோனோவால் மஜுலிலாக் தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்ற இவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடு, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மோடி கூறுயதாவது:-
சோனோவாலுக்கு ஒரு வாய்ப்பு அளித்ததுக்கு அசாம் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர் மேலும் மக்களுக்குச் சேவை செய்யும் உள்ளம் கொண்டவர். அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சியில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும் என்றார்.