ஜம்மு காஷ்மீரில் உரி நகரில் ராணுவ முகாமிலுள்ள கூடாரத்தில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கூடாரம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
இத்தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்த வீரர்களில் மேலும் ஒரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவம் மீது சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இந்த தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ராணுவ அதிகாரிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புகழ்பெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உரி தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார். இது சக மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மாணவரை பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த மாணவருக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.