குடியரசு தினவிழாவில் தமிழகத்துக்கு 3-ம் பரிசு

குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ம் தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

Last Updated : Jan 29, 2017, 11:06 AM IST
குடியரசு தினவிழாவில் தமிழகத்துக்கு 3-ம் பரிசு title=

புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ம் தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்படும் படைப்பிரிவு மற்றும் அலங்கார ஊர்திகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அத்துடன் சிறந்த கலைநிகழ்ச்சிகளை வழங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறப்பு சேர்த்தவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த அணிவகுப்பை வழங்கிய ராணுவத்தின் மெட்ராஸ் என்ஜினீயர் குழுவுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. துணை ராணுவ பிரிவில் சிறந்த அணிவகுப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை தேர்வு செய்யப்பட்டது.

மாநிலங்களின் கலாசாரம், பண்பாட்டை எடுத்துக்கூறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் முதல் பரிசை அருணாசல பிரதேச மாநிலமும், 2-வது பரிசை திரிபுரா மாநிலமும் தட்டிச்சென்றுள்ளன. 3-வது பரிசு தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

மேலும் ‘பசுமை இந்தியா-தூய்மை இந்தியா’ என்ற தலைப்பின் கீழ் உருவாக்கப்பட்டு இருந்த பொதுப்பணித்துறையின் அலங்கார ஊர்தி, நடுவர்களின் சிறப்பு பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் பிரிவில் டெல்லி பிதம்புராவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ- மாணவிகள் அரங்கேற்றிய தேசிய கொடி நடனம் முதல் பரிசை வென்றது.

Trending News