26/11 மும்பை தாக்குதல்: 21ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதம் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி என்பதை அனைத்து இந்தியர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் நினைவூட்டும் ஒரு தேதியாக நவம்பர் 26 உள்ளது. 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், தாக்குதலின் காயங்கள் இன்னும் நாட்டு மக்களின் இதயங்களில் அப்படியேதான் உள்ளன. இந்த தாக்குதல் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக நாடுகள் "பயங்கரவாதம்" என்ற அச்சுறுத்தலை ஒப்புக் கொண்டன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தத் தாக்குதல், நமது தேசியப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள பற்றாக்குறையைக் காணச் செய்தது. இதை தடுக்கும் வழிகளை தேடச் செய்தது.
ஒரு தேசமாக இந்தியா இந்த சவாலை ஏற்றுக்கொண்டது. அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக தலைநிமிர்ந்து நின்று, பயங்கரவாதிகளின் திட்டங்களை முறியடிக்க பல வித திட்டங்களை தீட்டத் தொடங்கியது.
26/11 மும்பை தாக்குதல் தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் மீதான நமது அக்கறையின்மையை அம்பலப்படுத்தியது
26/11 மும்பை தாக்குதல், ஒரு நாடு தனது தேசிய பாதுகாப்புத் தேவைகளில் கவனம் செலுத்தாமல் போனால் என்ன நேரிடும் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்தது. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், ஓபராய் ட்ரைடென்ட் மற்றும் தாஜ் பேலஸ் & டவர் உட்பட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் குழு தொடர் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது. தேசிய பாதுகாப்புப் படையினர் ஒன்பது பயங்கரவாதிகளைக் கொன்று ஒருவரை உயிருடன் பிடித்தனர். ஆனல், அதற்கு முன்பு மும்பை நான்கு நாட்கள் அவர்களின் கைப்பிடியில் சிக்கித் தவித்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதலில் 165 பேர் உயிர் இழந்தனர், 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியது. தாக்குதல் நடத்தியவர்கள் கராச்சியில் இருந்து படகில் பயணம் செய்து யாரும் கவனிக்காத வண்ணம் மும்பைக்குள் நுழைந்தனர்.
26/11 தாக்குதலுக்குப் பின் தேசியப் பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள முக்கிய பத்து நடவடிக்கைகள்:
மும்பை தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்க அரசாங்கம் மிகவும் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கியது. இப்போது, இந்தியாவிற்கு வெளியே இருந்து வரும் தாக்குதல்களைச் சமாளிப்பதற்கான தயார்நிலையில் இந்தியா ஆக்ரோஷமான அணுகுமுறையை கொண்டுள்ளது. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் 26/11 போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தை சமாளிப்பதற்கும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியல் இதோ:
1. கடலோர பாதுகாப்பு தயார்நிலை: இந்தியாவின் கடலோர காவல்படையினரின் கண்ணில் படாமல் பயங்கரவாதிகள் எல்லைக்குள் நுழைந்தது இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பெரும் சங்கடத்தை அளித்தது. இந்த சம்பவம் நடந்து ஒரு தசாப்தத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், தற்போது கடலோரப் பாதுகாப்புத் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 26/11 போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க ஒரு பெரிய கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பு தற்போது உள்ளது.
மேலும் படிக்க | மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்; பாக்., எண்ணில் இருந்து வந்த எச்சரிக்கை
2. கடலோர உள்கட்டமைப்பு: 26/11க்குப் பிறகு கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம், மேம்பட்ட கடல்சார் கள விழிப்புணர்வின் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகும். கடலோர கண்காணிப்பு வலையமைப்பு ஏற்கனவே கடற்கரையோரத்தில் நிறுவப்பட்டு முதல் கட்டம்- 46 ரேடார்களுடன்- ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 38 ரேடார்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தியா ஏற்கனவே குருகிராமில் உள்ள தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையத்தை அதிகரித்த விழிப்புணர்விற்காக ஷிப்பிங் தரவுகளை எளிதாக சேகரிப்பதற்கும் பரப்புவதற்கும் நியமித்துள்ளது.
3. ஆபரேஷன் சாகர் கவச்: மும்பை மீதான 26/11 தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் காவல்துறை உள்ளிட்ட பல பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக ஆபரேஷன் சாகர் கவச் செயல்படுத்தப்பட்டது.
4. இந்திய கடற்படையின் பலம்: 26/11 போன்ற எந்த ஒரு அசம்பாவிதத்தையும் தடுக்க இந்திய கடற்படையின் திறன் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது இப்போது கடல்களில் இந்தியாவின் நலன்களை நிலைநிறுத்தும் திறன் கொண்டதாகத் தெரிகிறது.
5. துணை பல முகமை மையங்களை (SMAC) நிறுவுதல்: உளவுத்துறை பணியகம் (IB) அதன் MACயை மறுசீரமைத்துள்ளது. அது இப்போது 24/7 செயல்படுகிறது. மற்ற அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுடனும் உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவில் 30 முக்கியமான இடங்களில் SMAC களை நிறுவியுள்ளது.
6. மீன்பிடி படகுகள் கண்காணிப்பு: அனைத்து மீன்பிடி படகுகளையும் 24/7 கண்காணிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு பயோமெட்ரிக் கார்டு வழங்குதல், ஆன்லைன் பதிவு, தானியங்கி அடையாள அமைப்பு (ஏஐஎஸ்) போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
7. ஃபோர்ஸ் ஒன்: மகாராஷ்டிரா அரசு ஃபோர்ஸ் ஒன் எனப்படும் உயரடுக்கு கமாண்டோ படையை நிறுவியுள்ளது. மேலும் அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு காவலர்களின் (என்எஸ்ஜி) வகையிலான சிறப்புப் பயிற்சியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
8. NSG தயார்நிலை: கடந்த 10 ஆண்டுகளில் தேசிய பாதுகாப்புப் படை (NSG) அதிக பாடங்களை கற்றுக் கொண்டது. இந்தியா எதிர்கொள்ளும் அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அது தயாராக உள்ளது.
9. மையப்படுத்தப்பட்ட தரவுத்தள உருவாக்கம்: 26/11 தாக்குதலுக்குப் பிறகு, ஒரு சிறப்பு நிறுவனம், தேசிய புலனாய்வு கிரிட் அல்லது NATGRID, பாதுகாப்பு தொடர்பான தகவல்களின் தரவுத்தளத்தை உருவாக்க உருவாக்கப்பட்டது. இத்தகைய தாக்குதல்களுக்கு விரைவான பதில் நடனடிக்கைகளை எடுப்பதற்காக மையங்கள் உருவாக்கப்பட்டன.
10. முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மேம்பட்ட பாதுகாப்பு இருப்பு: நாட்டில் முன்னெப்போதையும் விட அதிக மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் ஆயுதமேந்திய காவலர்கள் முக்கியமான இடங்களில் உள்ளனர்.
மேலும் படிக்க | மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த தீவிரவாதி தமிழகத்தில் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ