விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித பேராசிரியையாக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் தனது வகுப்பில் படித்து வரும் 4 மாணவிகளை அழைத்து உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு தெரிவித்ததுடன் இதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் எனவும் கூறிய ஆடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.
இதனையடுத்து அக்கலூரி கணித பேராசிரியையாக பணிப்புரியும் நிர்மலா தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு அந்த பேராசிரியை நிர்மலா தேவி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இதுகுறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் "இந்த விவகரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசியை பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மை விசாரிக்கப்படும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். அவர் கூறியதற்கும், பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மதி தெரிவித்துள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் ஆளுநர் மாளிகையில் உயர்மட்ட விசாரணை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளனர்.