ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 35-வது லீக் ஆட்டம் இன்று மாலை 4 மணியளவில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதின. முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான மெக்கல்லம் 5, விராட்கோலி 8, டிவில்லியர்ஸ் 1, மன்திப் சிங் 7, கிராண்ட்ஹோம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி பந்து வீச்சில் ஜடேஜா 3, ஹர்பஜன் 2, வில்லி, நெகிடி தலா 1 ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் களமிறங்கினர்.
வாட்சன் 11 ரன்கள் எடுத்த போது உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். ஆனால் பின்னர் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடினர். ரெய்னா 25 ரன்கள் எடுத்த போது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சவுத்தியின் சிறப்பான கேட்சால் ஆட்டமிழந்தார்.
இறுதியாக சென்னை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 128 எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.