பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கார் தயாரிப்பு பணியில் முன்னணியில் இருக்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்துடன் 10 ஆண்டு காலத்திற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது, சென்னை துறைமுகத்திலிருந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் ஹூண்டாய் நிறுவன கார்களை ஏற்றுமதி செய்வது ஆகும்.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி ஹூண்டாய் கார்களை 20 நாள்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி சென்னை துறைமுகத்தில் வைத்து பாதுகாத்தல், முன்னுரிமை அடிப்படையில் கார்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்தும்போது இரட்டைக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய்.கே. கூ மற்றும் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் பி. ரவீந்திரன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.