அதிகரிக்கும் காய்ச்சல் நோயாளிகள்: ‘இது கோவிட் 19 காய்ச்சல் அல்ல’ என அடம் பிடிக்கும் வட கொரியா

North Korea: தென் கொரியாவால் ஏவப்பட்ட பலூன்கள் மூலம் எல்லையில் பறந்த பியோங்யாங் எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள் மற்றும் பிற பொருட்களால் கொரோனா வைரஸ் வட கொரியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 26, 2022, 12:22 PM IST
  • சீனாவுடனான வட கொரியாவின் எல்லைப்பகுதியில் பலருக்கு காய்ச்சல்.
  • வட கொரியா பலருக்கு காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தியது.
  • ஆகஸ்ட் 10 முதல் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்றும் உறுதிபடுத்தப்படவில்லை என அந்நாடு கூறுகிறது.
அதிகரிக்கும் காய்ச்சல் நோயாளிகள்: ‘இது கோவிட் 19 காய்ச்சல் அல்ல’ என அடம் பிடிக்கும் வட கொரியா title=

சீனாவுடனான வட கொரியாவின் எல்லைப் பகுதியில் சமீபத்தில் பலருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் கொரோனா தொற்றின் காய்ச்சலாக இருக்குமோ என முதலில் ஒரு அச்சம் இருந்தது. ஆனால், அது கொரோனா காய்ச்சல் அல்ல, இன்ஃப்ளூயன்ஸா என்று சோதிக்கப்பட்டதாக வட கொரியா வெள்ளிக்கிழமை கூறியது. நால்வருக்கு கோவிட்-19 -க்கான காய்ச்சல் இருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரியாங்காங் பகுதியில் குறிப்பிடப்படாத பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக வட கொரியா தெரிவித்தது. இந்த செய்திக்கு ஒரு நாளைக்கு பிறகு, இது கொரோனா தொற்றுக்கான காய்ச்சல் அல்ல என வட கொரொயாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. 

ஓமிக்ரான் தொற்று பரவியதாக வட கொரியா ஒப்புக்கொண்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, தலைவர் கிம் ஜாங் உன் வைரஸுக்கு எதிரான வெற்றியை அறிவித்தார். இது பரவலாக சர்ச்சைக்கு உள்ளானது. ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று எதுவும் அங்கு உறுதிப்படுத்தப்படவில்லை என்று வட கொரியா கூறுகிறது. 

மாதிரிகள், அறிகுறிகளின் தன்மை மற்றும் தொற்று அறிதல் மூலம் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் மூலம் தற்போது சிலருக்கு வந்துள்ள காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா காரணமாக ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் முடிவு செய்ததாக கெசிஎன்ஏ கூறியது. நோயாளிகளின் உடல் வெப்பநிலை தற்போது இயல்பாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | உக்ரைன் போர் : ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறதா வடகொரியா? 

வட கொரிய அதிகாரிகள் ஊரடங்கை நீக்கினர், ஆனால் மக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிவதன் மூலமும், காய்ச்சல் அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக சுகாதார அதிகாரிகளிடம் புகாரளிப்பதன் மூலமும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

வைரஸுக்கு எதிரான வட கொரியாவின் வெற்றி உலகளாவிய ஆரோக்கிய அதிசயமாக அங்கீகரிக்கப்படும் என்று கிம் கூறிய அதே வேளையில், முழுமையான கட்டுப்பாட்டை கொண்டிருப்பதாக உலகம் நம்ப வேண்டும் என்று, வட கொரியா உண்மையான தொற்று நிலையை மறைப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். வைரசுக்கு எதிரான வெற்றியின் அறிக்கை, மற்ற விஷயங்களை பற்றி திசை திருப்புவதற்காக நடந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். மற்ற விஷயங்களில் முக்கியமான விஷயங்களில் ஒன்று அணுகுண்டு சோதனையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. 

மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதை ஒப்புக்கொண்ட பிறகு, வட கொரியா தடுப்பூசி போடப்படாத சுமார் 26 மில்லியன் மக்கள் தொகையில், சுமார் சுமார் 4.8 மில்லியன் பேருக்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தது. எனினும், இவர்களில் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. நாட்டின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 74 ஆகும். இது அசாதாரணமான மிகக் குறைந்த எண்ணிக்கை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டில் பொது சுகாதார வசதிகள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், இந்த இறப்பு எண்ணிக்கை மிக குறைவு என்றே நிபுணர்கள் நம்புகிறார்கள். 

தங்கள் நாட்டில் கோவிட்-19 தொற்று பரவியதற்கு தென் கொரியா தான் காரணம் என்று வட கொரியா கூறி வருகிறது. இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது. தென் கொரியாவால் ஏவப்பட்ட பலூன்கள் மூலம் எல்லையில் பறந்த பியோங்யாங் எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள் மற்றும் பிற பொருட்களால் கொரோனா வைரஸ் வட கொரியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. 

மேலும் படிக்க | மீண்டும் ஆயுத சோதனை: 2 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News