அரசியலில் ரஜினிகாந்த்தை எதிர்க்க தயார் -கமல்ஹாசன்!

அரசியலில் ரஜினிகாந்த்தை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் எதிர்ப்பேன் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 4, 2018, 08:54 AM IST
அரசியலில் ரஜினிகாந்த்தை எதிர்க்க தயார் -கமல்ஹாசன்!  title=

திருச்சியில் இன்று  மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ரயிலில் திருச்சிக்கு வந்தார் கமல்ஹாசன். ரயில் நின்று செல்லும் எல்லா ரயில் நிலையங்களிலும் தொண்டர்களை சந்தித்தார் கமல்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமல்; இன்றைய அரசியல் சீர்திருத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மக்களின் கடமையும் கூட. யாரோ ஒரு அரசியல்வாதி வருவான். அவன் திருத்துவான் என்று நினைக்காமல், மக்கள் தன் பொறுப்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். 

அதை தொடங்கிவிட்டார்கள். அதற்கான அடையாளங்கள் தெரிவதாக நான் நம்புகிறேன். அரசியல் சீராக மக்கள் முதலில் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. தேர்தலின் போது கட்டாயம் ஓட்டுபோட்டே ஆக வேண்டும். அது அவர்கள் கடமையும் கூட. யாருக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தீர்களோ அவர்களிடம் துணிந்து கேட்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க-வின் உண்ணாவிரதம் கேளிக்கையான ஒன்று. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதில் உண்ணாவிரதம் இருந்தால் என்ன பயன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஆனால், நடப்பதை பார்க்கையில் தட்டிக்கழிக்கப்படுவது போல் உள்ளது. அமைக்கவே மாட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது தான் விதி என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. விதியை மதியாலோ, நீதியாலோ வென்றே ஆக வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதற்காக தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி எல்லாம் போகவிடக் கூடாது. தயவு செய்து மக்களை அப்படி கொதித்து எழவைத்துவிடாதீர்கள். உங்களின் அரசியல் நோக்கம் எதுவாக இருந்தாலும் மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்" என்றவரிடம், அரசியலில் ரஜினிகாந்தை எதிர்ப்பதற்கான சூழல் வரும் என்று நினைக்கின்றீர்களா? அப்படி வந்தால் என்ன செய்வீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர்.

இந்த கேள்விக்கு பதில் கூறிய கமல்...!  

"எதிர்பதற்கான சூழல் ஏற்பட்டால் செய்யவேண்டியது தான். கொள்கை ரீதியாகவும், செயல் முறைகளை பார்த்தும் நான் எடுத்த முடிவு. அது வரும்போது பார்க்கலாம். கெட்டது தான் நடக்கும் என்று ஏன் யூகிக்க வேண்டும்? அப்படி ஏற்படாமல் இருந்தால் நல்லது. ஏற்பட்டால் நின்று செயல்படாமல் இருந்துவிட முடியுமா" என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

ரஜினியின் பூர்வீகம் பற்றி ஒருவர் கேட்ட போது, "ஒருவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று பார்க்கக் கூடாது. அவர் இந்த சமூகத்துக்கு என்ன மாதிரியான கருத்துக்களை அளிக்கிறார் என்று தான் பார்க்க வேண்டும்" என்றார்.

Trending News