மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலமேட்டில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பதை தடுக்க மதுரை மாவட்டத்தில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உள்பட அனைவரும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என ஆதரவுக் குரல்கள் தமிழகம் முழுவதும் வலுத்தது.
இது தொடர்பான தொடர் போராட்டங்களும் நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்றம் கைவிரிப்பு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் எனவும், மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கும் எனவும் பொதுமக்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனிடையே தடையை மீறி பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது.
இந்நிலையில் இன்று காலை பத்து மணி அளவில் பாலமேட்டில் உள்ள கோவிலில் ,காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணியும் நடைபெற்றது.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கூட்டத்தில் இருந்த சிலர் தங்களுடைய காளைகளை அவிழ்த்து விட்டனர்.இதனையடுத்து அந்த காளைகளை அடக்க இளைஞர்கள் முயன்றனர்.நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.