வாச்சாத்தி கிராமம் எங்கு உள்ளது?
வாச்சாத்தி மலை கிராமம் தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 1992-ம் ஆண்டு சுமார் 655 பேர் வசித்து வந்தனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
வீரப்பன் தேடுதல் வேட்டை
1992 ஆம் ஆண்டு வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமாக இருந்தது. அந்த சமயத்தில் வாச்சாத்தி கிராமப் பகுதிகளில் கடந்த 1992-ம் ஆண்டு ஜுன் 20-ம் தேதி வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். அப்பகுதியில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாக வந்த புகாரையடுத்து 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக் குழுவினர் அங்கு சோதனையிட்டனர். வீடு, வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த சில வீடுகள் மற்றும் ஏரிப்பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அங்கிருந்த 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க | பாபிசிம்ஹாவை ஏமாற்றிய பொறியாளர்? 1.70 கோடியில் கட்டிய வீடு நாசம்!
பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்
இந்த சோதனையில் கிராம மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 18 மலைவாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்போதைய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிபிஐ விசாரணை
இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்கள் 1993-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், உரிய விசாரணை ஏதும் நடைபெறவில்லை எனக்கோரி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தினர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 1995-ம்ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட வனத்துறையைச் சேர்ந்த 155 பேர், போலீஸார் 108 பேர், வருவாய்துறையினர் 6 பேர் என மொத்தமாக 269 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 1996-ல் சிபிஐ கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவை மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் வழக்கு நடத்தப்பட்டு, 2008-ல் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு
வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டிலேயே ஒரு வழக்கில்அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்காக இது இருந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிர்வை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருந்தது.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில், தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், இன்று தீர்ப்பை வழங்கினார். அதில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த அவர், தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.
வாச்சாத்தி வழக்கு தீர்ப்பு விவரம்:
- வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீது 1992ல் நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.
- "பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு இழப்பீடு வழங்க வேண்டும்.. குற்றம் புரிந்தவர்களிடம் ரூ. 5 லட்சம் வசூலிக்க வேண்டும்" - நீதிபதி வேல்முருகன்
- "அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - நீதிபதி வேல்முருகன்
- “பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” - நீதிபதி வேல்முருகன்
- குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என கடந்த 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
- 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
மேலும் படிக்க | உதயநிதி இன்னும் 21 நாளில் சிறை செல்வார் - ஹெச். ராஜா சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ