தமிழகத்தில் கடந்த சில தினங்களால் இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருச்சியில் உள்ள இந்திய தபால் அலுவலகம் மற்றும் BSNL அலுவலகம் பெயர் பலகையில் இருந்த இந்திய எழுத்துகளை மர்ம நபர்கள் மை கொண்டு அழித்துள்ளனர்!
புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறை அடுத்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் வலுத்தது.
மத்திய அரசு திட்டமிட்டு இந்தியை தமிழக மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மத்திய அரசு தனது பரிந்துரையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.
இதையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. பரிந்துரை மட்டும்தான் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. மேலும் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை மீதான புதிய கல்வி கொள்கை பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இ.மெயில் மூலம் மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.
என்றபோதிலும் தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் ஓயவில்லை. இந்தி பேசாத மாநிலங்களில் மாணவர்கள் மூன்றாவது மொழியாக இந்தியைதான் படிக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருபோதும் ஏற்க இயலாது என்ற குரல் டெல்லி வரை எதிரொலித்தது. இதையடுத்து கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தில் தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மொழியை மாணவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் வரைவு திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்திதான் படிக்க வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்து வேறு மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ்நாட்டில் இரு மொழி கல்வி திட்டமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் எனவும் அரசியல் தலைவர்கள் தொடங்கி அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திருச்சியில் உள்ள இந்திய தபால் அலுவலகம் மற்றும் BSNL அலுவலகம் பெயர் பலகையில் இருந்த இந்திய எழுத்துகளை மர்ம நபர்கள் மை கொண்டு அழித்துள்ளனர். இச்சம்பவம் போராட்டத்தின் வீரயத்தை மேலும் அதிகரித்துள்ளது.