தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழக சட்டசபையை மீண்டும் கூட்ட அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த மாதம் ஜூன் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிகிறது. ஜூன் 7ம் தேதி அல்லது 8-ம் தேதியில் கூட்டம் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.
சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.
இந்த சட்டசபை கூட்டத்தொடரில், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, நாளை முதல் தினந்தோறும் துறை வாரியாக ஒவ்வொரு அமைச்சருடனும் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல் நாளில், தொழில் துறை அமைச்சர் மற்றும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.