விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதவராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்பு போராட்டத்தில், அதிமுக, பாஜக, பாமக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய சங்கங்களும் தங்களது முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால், அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிகிறது.
ஓட்டல்கள், தியேட்டர்கள், மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் தவிர, பெரும்பாலான தொழிற்சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்று அரசு பஸ் போக்குவரத்தில் சுணக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மணல் லாரிகளும் இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்கின்றன. பால் முகவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பால் வினியோகம் தடைபடும் நிலை உருவாகியுள்ளது. சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது.
முழு அடைப்பு போராட்டத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து நடத்துவதால், அதை தோல்வியடையச் செய்யும் முனைப்பில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முக்கிய இடங்களில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அரசு பஸ்களை காலை முதலே முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அடைக்கப்படும் கடைகளும் மாலை 6 மணிக்கு பிறகு திறக்கப்படுகிறது.
திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் தமிழனின் அனைத்து போராட்டமும், சிறு கூட்ட போராட்டம் போல உதாசீனப்படுத்துகிறது. அகில இந்திய அளவில் விவசாயிகளின் அவல நிலையை சுட்டிக்காட்டுவதுடன், தமிழர்களின் ஒற்றுமையை கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு காட்டுவதற்கு அடையாளமாக ரூ.7 ஆயிரம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்திட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூற காங்கிரஸ், கம்யூனிஸ்டு இணைந்து தி.மு.க. தந்த வேண்டுகோளை ஏற்று இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் முழுவதும் நடைபெறும் கடையப்பு போராட்டத்தில் அனைத்து வியாபாரிகளும் பங்கேற்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
Coimbatore (Tamil Nadu): Opposition parties call for statewide shutdown in support of drought-hit farmers pic.twitter.com/q8GeYKiOxb
— ANI (@ANI_news) April 25, 2017