சென்னை: தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் காலாண்டு விடுமுறை குறித்து வெளியான செய்தி உண்மை இல்லை. அதுவெறும் வதந்தி தான் என்று பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை பள்ளிகள் இயங்கும். அடுத்த நாளில் இருந்து (செப்டம்பர் 24) வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும். மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்படும். அக்டோபர் 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும்.
ஆனால் காந்தியின் 150_வது பிறந்த தினத்தையொட்டி, இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்படவுள்ளதாகவும், விடுமுறை நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, காலாண்டு விடுமுறை குறித்து வெளியான செய்தி உண்மை இல்லை. அதுவெறும் வதந்தி தான். காலாண்டு விடுமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகள் விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம். அதில் மாணவர்கள் விருப்பப்பட்டால் கலந்துக் கொள்ளலாம் என விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.