PMK:2021 - 2022ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது

தமிழக அரசிற்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 5, 2021, 01:42 PM IST
  • பெண் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி
  • 6% வேளாண் வளர்ச்சி
  • அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் கலையப்படும்
PMK:2021 - 2022ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது title=

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசிற்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் பொது நிழல் நிலை அறிக்கைகளை வெளியிடும். இன்று பாமக வெளியிட்ட பொது நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 

வரவு - செலவு
1. 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.4,98,585 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவைவிட ரூ.2,22,125 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,09,945 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,05,786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,27,426 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.

3. 2021-22 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.71,159 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.7,201 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

தமிழக பொருளாதாரம் - ஓர் ஆய்வு!

4. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுதான் இன்றைய நிலையில் உடனடி தேவை என்பதால், அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

5. தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு 2021-22ஆம் ஆண்டில் ரூ.23 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், ரூ.20 லட்சம் கோடி என்ற இலக்கை அடைய போராட வேண்டியிருக்கும்.

6. 2020-21ஆம் ஆண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் இலக்கைவிட 17.64% வீழ்ச்சி அடைந்து, ரூ.1,09,968 கோடியாக குறைந்துள்ளது. மொத்த வருவாய் 17.63% வீழ்ச்சியடைந்து ரூ.1,80,700 கோடியாக குறைந்துள்ளது.

7. 2020-21ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.21,617.61 கோடி என்ற இலக்கைவிட 3 மடங்கு அதிகரித்து, ரூ.65,994.06 கோடி என்ற உச்சத்தை அடைந்துள்ளது. அதேபோல், நிதிப் பற்றாக்குறையும் ரூ.59,346.29 கோடி என்ற இலக்கைக் கடந்து, ரூ.96,889.97 கோடியாக அதிகரித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை தொடரும்

8. 2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,35,641.78 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.2,18,991.96 கோடியாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்த இலக்கை எட்ட முடியாது.

9. நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.84,202.39 கோடியாகவும் இருக்க வேண்டும். ஆனால், இவை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்.

ஓராண்டில் ஒரு லட்சம் கோடி கடன்

10. 2021-22 ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்க நேரிடும்.

11. 2021 - 22ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.6 லட்சம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனக் கடன் ரூ.4 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும். மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும்.

12. நடப்பாண்டின் முடிவில் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1,27,388.54 கடன் இருக்கும். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5,09,554 கடனை அரசு வாங்கியிருக்கும்.

Also Read | PMK: 2021 - 2022ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது

வட்டி மட்டும் ரூ.85,000 கோடி

13. 2021&22 ஆம் ஆண்டில் வட்டியாக மட்டும் ரூ.85,000 கோடி செலுத்த வேண்டியிருக்கும். இதில், நேரடிக் கடனுக்கான வட்டி ரூ.51,000 கோடி; பொதுத்துறை நிறுவன கடன்களுக்கான வட்டி ரூ.34,000 கோடி; ஒவ்வொரு நாளும் ரூ.232 கோடி கடன் செலுத்த வேண்டியிருக்கும்.

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை

14. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக 10 விழுக்காடுகளுக்கும் கூடுதலான ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.

15. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

16. மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை போன்றவை அடிப்படை வரியோடு இணைக்கப்பட வேண்டும். அதன் மூலம், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் சிறப்பாண்டு

17. 2021-22ஆம் ஆண்டை விரைவான நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் சிறப்பாண்டாக கடைபிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

18. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2025-26ஆம் ஆண்டில் 32 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

19. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.

20. 5 இடங்களில் ஆயத்த ஆடை பூங்காக்கள் அமைக்கப்படும். ஆயத்த ஆடை ஏற்றுமதி அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.

21. நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.

வரியில்லா வருவாய் ரூ.2.09 லட்சம் கோடி

22. 2021-22ஆம் ஆண்டில் வரியில்லா வருவாய் ரூ.2.09 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

23. கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.25,000 கோடியும் ஈட்டப்படும்.

24. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.25,000 கோடி கிடைக்கும்.

25. பிற ஆதாரங்களில் இருந்து வரியில்லா வருவாயை கணிசமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

26. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

கொரோனா ஈகியர் நினைவுக் கோட்டம்

27. கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், சென்னைப் புறநகரில் 10 ஏக்கர் பரப்பளவில் நினைவுக் கோட்டம் அமைக்கப்படும்.

28. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி.

29-. செங்கல்பட்டு தடுப்பூசி வாளகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும். அங்கு கொரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும்.

புதிய உயர்கல்வி நிறுவனங்கள்

30. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:

1. அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (Anna University  Institute of Eminence (IoE)) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.

2. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம்  - இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
3. சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

4. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.

5. ஐந்து புதிய சட்டக் கல்லூரிகள், 5 புதிய வேளாண் கல்லூரிகள் தொடங்கப்படும்.

தமிழகத்தை உயர்கல்வி மையமாக்குதல்

31. வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து உயர்கல்வி கற்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தை உயர்கல்வி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

32. தமிழ்நாட்டை உயர்கல்வி மையமாக்க இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள  திட்டங்கள் தவிர, புதிய திட்டங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

வேலைவாய்ப்புப் பெருக்க திட்டம்

33. புதிய உயர் கல்வி நிறுவனங்கள் தொடக்கப்படுவதால், அதில் படித்து கல்விபெறுவோருக்கும். ஏற்கெனவே படித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வசதியாக வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

34. தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்பபு ஏற்படுத்தித் தரப்படும்.

35. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.  

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை

36. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. உதவித்தொகை விவரம்:

1. பத்தாம் வகுப்பில் தோல்வி ரூ.1,000

2. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000

3. 12ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.3,000

4. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.4,000

5. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.5,000

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000

37. தமிழ்நாட்டில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக வறுமை ஒழிப்பு ஆணையம் அமைக்கப்படும். இதன் தலைவராக பொருளாதார வல்லுநர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

38. வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களை வறுமையிலிருந்து மீட்கும் நோக்குடன் அடிப்படை வருமானத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

39. ஆதரவற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்காமலேயே மாத உதவித் தொகை ரூ.1500 வழங்கப்படும். பயனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்படும்.

Also Read | மேகதாது அணை விவகாரம்; தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி பயணம்

மது விலக்கு

40. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 15 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

ரூ.25 லட்சம் கோடியில் உட்கட்டமைப்பு

41. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்படும்.

42. தமிழ்நாட்டிற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் தலைமையில் தனி அமைச்சரவைக் குழு அமைக்கப்படும்.

நேர்முகத் தேர்வுகள் இரத்து

43. கடைநிலை ஊழியர் தொடங்கி முதல் தொகுதி பணியாளர்கள் வரை அனைத்துப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு இரத்து செய்யப்படுகிறது. போட்டித் தேர்வு மதிப்பெண் மூலமே இனி பணி நியமனம் நடைபெறும்.

44. மருத்துவப் படிப்புகளில் ஈழத் தமிழர்களுக்கு 10 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும்.

45. ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.

46. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மதிய உணவில் சிறு தானிய உணவுகள் வழங்கப்படும்.

தமிழர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு

47. தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 100% அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க தேவையான சட்டத்திருத்தம் மற்றும் விதி மாற்றங்கள் செய்யப்படும்.

48. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் தமிழக இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிப் புதிய சட்டம் இயற்றப்படும்.

வலிமையான லோக்அயுக்தா

49. தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் அயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.

50. முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக்அயுக்தாவின் அதிகார வரம்பிற்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

பொதுச் சேவை உரிமைச் சட்டம்

51. தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

52. தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது.

மின் கட்டணம் குறைப்பு

53. தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56% குறையும்.

புதிய மின் திட்டங்கள்

54. அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

55. அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

56. மின்வாரியத்தை இலாபத்தில் இயக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

57. ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

உள்ளாட்சித் தேர்தல்

58. தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்படாத 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் மாதமும், மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் ஜனவரி மாதமும் நடத்தப்படும்.

59. சென்னையில் அனைத்து நகரப் பேருந்துகளிலும் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம். மற்ற 37 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்.

புதிய கல்விக் கொள்கை

60. புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதகமான அம்சங்கள் மட்டும் செயல்படுத்தப்படும்.  தமிழ்நாட்டில் நமது கல்வி முறைக்கும், பண்பாட்டுக்கும் ஒத்துவராத அம்சங்கள் செயல்படுத்தப்படாது.

61. தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அறிமுகப்படுத்தப்படாது. அதனால் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் எதுவும் மாணவர்கள் மீது திணிக்கப்படாது.

பள்ளிக் கல்விக்கு ரூ.70,000 கோடி

62. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 1,000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.

63. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைவிட சிறப்பானதாக தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் வலுப்படுத்தப்படும்.

64. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.35,000 செலவிடப்படும்.

65. அருகமைப் பள்ளி முறை நடைமுறைப்படுத்தப்படும். மாநிலப் பாடத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தால், அவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பள்ளியில் தானாக இடம் ஒதுக்கப்படும்.

66. பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளி கல்விக்கு தனி நிதியம்

67. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

உயர்கல்வி

68. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தை 2025ஆம் ஆண்டுக்குள் 55 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

69. உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

70. அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.

கல்விக் கடன்கள் தள்ளுபடி

71. தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்கு ரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.

மருத்துவ ஸ்மார்ட் அட்டை

72. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அது குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். அது குறித்த விவரங்களை பதிவு செய்ய மருத்துவ தகவல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் தமிழக மக்கள் எந்த ஊரிலும், எந்த மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை பெற முடியும்.

73. அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, எவருக்கேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

74. 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 1,303&லிருந்து, 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை

75. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.

76. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிறுவனத்தில் நடப்பாண்டில் 150 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கப்படுவார்கள்.

77. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு 2021-2022ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

78. மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

79. விழுப்புரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

Also Read | இதக்கூட விட்டு வைக்காம வீட்டுக்கு எடுத்துட்டு போனாரு: ராஜேந்திர பாலாஜியை சாடிய எஸ்.எம். நாசர்

புதிய மாவட்டங்கள் சீரமைப்பு தொடரும்

80. 2019-2021ஆம் ஆண்டுகளில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

81. 2021 - 22ஆம் ஆண்டில் தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்படும்.

82. 12 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு மாவட்டம்  என்ற அளவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். இந்த மறுசீரமைப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 60 மாவட்டங்கள் இருக்கும்.

சட்டம் - ஒழுங்கு

83. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.

84. காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

85. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.

86. காவல்துறையினரின் நலன்களைக் காக்க 4ஆவது காவல் ஆணையம் ஏற்படுத்தப்படும்.

அனைத்து சாதியினருக்கும் உள்ஒதுக்கீடு

87. வன்னியர் உள்இடஒதுக்கீட்டுச் சட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

88. விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள், ஆகியோருக்கு மக்கள் தொகை அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்படும்.

89. நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர், குயவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளி கவுண்டர் ஆகிய 10 சமுதாயங்களும் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

90. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு / தொகுப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு கார்ப்பரேஷன்

91. தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் எந்த அளவுக்கு கிடைத்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

92. ஆந்திராவில் உள்ளதைப் போன்று, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளில் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட அனைத்து சாதிகளின் முன்னேற்றத்திற்கும் தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்படும்.

93. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படும்.

கரும்பு சாகுபடிக்கு புத்துயிரூட்டும் திட்டம்

94. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் கடந்த 11 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. 2020 - 21ஆம் ஆண்டில் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 6.52 லட்சம் டன்னுக்கும் குறைவு ஆகும். இந்த நிலையை மாற்றி, அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

95. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய ரூ.1,500 கோடி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கும்.

96. உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் 10% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு, கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை மேம்பட, மேம்பட கரும்புக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்படும். இதை அரசு கண்காணிக்கும்.

Also Read | அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

6% வேளாண் வளர்ச்சி

97. வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குழு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

98. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதன் மூலம், கோடைக்காலங்களிலும் விவசாயம் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் புரட்சிகரமான நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறுதானிய சாகுபடி

99. கம்பு, வரகு, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களின் சாகுபடி மானாவாரி நிலங்களில் ஊக்குவிக்கப்படும். அதற்காக சிறப்பு மானியம் வழங்கப்படும்.

100. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்

101. தமிழ்நாட்டின் நீர்ப்பாசன கட்டமைப்பு வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய காவிரி & கோதாவரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

102. காவிரி & கோதாவரி இணைப்புக்குத் தேவையான பிற அனுமதிகள் பெறப்பட்டு, 2022ஆம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

103. மேட்டூர் உபரிநீர்த் திட்டம் செயல்படுத்தி முடிக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதனால் போதிய பயன் கிடைக்காது. அதனால் மேட்டூர் உபரிநீர்த் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை ரத்து

104. சென்னை- சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஆனாலும் விதிமுறைகளை பின்பற்றி புதிதாக நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதாலும், அதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு தான் உள்ளது என்பதாலும், தமிழக அரசு உழவர்களின் நிலங்களை கையகப் படுத்தித் தராது. இதன் மூலம் சென்னை & சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் ரத்தாகிவிடும்.

105. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் உடனடியாக மூடப்படும்.

சந்தைகளுக்கு இலவச பேருந்து

106. காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை சந்தைப் படுத்துவதற்கு வசதியாக, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மிகப்பெரிய அளவில் சந்தை ஏற்படுத்தப்படும்.

107. கிராமப்புற விவசாயிகள் தங்களின் விளைப் பொருட்களை இரவு 8 மணிக்குமேல் அரசுப் பேருந்துகளில் சந்தைகளுக்கு இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

108. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.

சுங்கக் கட்டணம்

109. முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை இரத்து செய்யவும், பராமரிப்பில்லாத சாலைகளில் 40% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கவும் மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.

110. மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும்.

111. சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.

மெட்ரோ ரயில்

112. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்ன மாதவரம் - சிறுசேரி சிப்காட், சென்னை மாதவரம் - சோழிங்கநல்லூர், சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களை அமைக்கும் பணிகள் விரிவுபடுத்தப்படும். 2025ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும்.

113. சென்னை விமானம் நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடப்பாண்டில் தொடங்கப்படும்.

தொடர்வண்டித் திட்டங்கள்

114. தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள 10 புதிய தொடர்வண்டிப் பாதைத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

115. சென்னை - கடலூர் பாதை, காரைக்குடி - கன்னியாகுமரி பாதை ஆகியவை அமைக்கப்பட்டு, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

கீழடி அருங்காட்சியகம் விரிவாக்கம்

116. கீழடியில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம் விரிவாக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.13 கோடியிலிருந்து ரூ.25 கோடியாக அதிகரிக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி

117. பெண் குழந்தைகளை சுமையாக பெற்றோர் நினைக்கும் நிலையை மாற்றும் வகையில்,  2021 & 22 நிதியாண்டு முதல் சிறப்பு ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

118. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் 18ஆவது வயதில் ரூ.5 லட்சம் கிடைக்கும் வகையில் அவர்கள் பெயரில் வங்கிகளில் குறிப்பிட்ட தொகை வைப்பீடு செய்யப்படும். அதற்கான சான்றிதழ் அவர்களின் பெற்றோரிடம் வழங்கப்படும்.

அரசு ஊழியர் நலன்

119. புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.

120. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

121. 01.06.2006 அன்று பணிநிலைப்பு செய்யப்பட்ட 45,000 ஆசிரியர்கள் அதற்குமுன் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 23 மாதங்கள் அவர்களின் பணிக்காலமாக சேர்க்கப்படும். இக்காலத்திற்கான ஊதிய நிலுவையும் வழங்கப்படும்.

122. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படும்.

123. அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் கலையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும்.

124. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் கலையப்படும்.

125. கொரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவை மீண்டும் வழங்கப்படும்.

காலநிலை செயல்திட்டம்

126. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தமிழக நகரங்களுக்கான காலநிலை செயல்திட்டம் (TN Urban Areas Climate Action Plan) உடனடியாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.

 

ஆண்டுதோறும் பாட்டாளி மக்கள் கட்சி வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடும். அரசுக்கு தகுந்த ஆலோசனை கூறுவதன் அடிப்படையில் பாமக வழக்கமாக வெளியிடப்படும் இந்த நிழல் நிதி அறிக்கை இன்று காலை சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:

1. தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளை பா.ம.க. தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக நடப்பாண்டு முதல் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்போவதாக தமிழக அரசு ஆளுநர் உரையில் அறிவித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு தமிழக அரசுக்கு வழிகாட்டும் வகையில் நடப்பாண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை கூடுதல் கவனத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

2. பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஒரு  முக்கிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறது. 2021 - 22ஆம் ஆண்டை வேளாண்மை மற்றும் வேளாண் கல்வி கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக அறிவித்து, அதை மையக்கருவாகக் கொண்டு இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் கட்டமைப்பு மற்றும் வேளாண் கல்வி கட்டமைப்புக்கான ஏராளமான புதிய திட்டங்கள்  இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

3. காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

4. உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்டக் கிடங்குகள் அமைக்கப்படும்.

5. கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் நெல் மூட்டைகளை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இனி மழையால் நெல் மூட்டைகள் சேதம் என்ற நிலை ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.
6. அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

7. உழவர்கள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில் நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

8. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.

9. சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.

10. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.

Also Read | Class 12 Exams: மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

11. தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

வேளாண் கல்வி - 3 புதிய பல்கலைக் கழகங்கள்

12. தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.

திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி

13. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உழவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும்.

14. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய்வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில்  தொடங்கும்.

15. தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (Rice Technology Park) அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.

16. வேளாண் துறைக்கு 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.47,750 கோடி நிதி ஒதுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இது 2021-22ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11,982.71 கோடியுடன் ஒப்பிடும் போது, சுமார் 4 மடங்கு அதிகம்

17. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,100 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

18. நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி செலவிடப்படும்.

19. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.7,000 கோடி செலவிடப்படும்.

20-. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.13,650 கோடி செலவிடப்படும்.

50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

21. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
 
22. கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

23. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.

24. கிராமப்புற சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுயஉதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரூ.36,000 வரை மூலதன மானியம்

25. தமிழ்நாட்டில் சிறு&குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.16,000, இரு ஏக்கருக்கு ரூ.26,000, 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்போருக்கு ரூ.36,000 என்ற அளவில் மானியம் கிடைக்கும்.

Also Read | MNM: புதிய நிர்வாகிகள் நியமனம், தலைவர் பதவியுடன் பொதுச்செயலாளர் பதவியும் கமலுக்கே

26. 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அடையாள உதவியாக ரூ.20,000 வழங்கப்படும்.

27. கூட்டுறவு வங்கிகள் தள்ளுபடி செய்த உழவர்களின் பயிர்க்கடனை ஈடுகட்டுவதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.5,000 கோடி தவிர மீதமுள்ள ரூ.7,110 கோடியும் நடப்பாண்டுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். இத்தொகைக்கான வட்டியாக ரூ.248.85 கோடி கூடுதலாக அரசு வழங்கும்.

28. நடப்பாண்டில் ரூ.14,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன்களை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

29. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி எதுவும் வசூலிக்கப்படாது. அதுமட்டுமின்றி, தவணை தவறாமல் கடனை செலுத்தும் உழவர்களுக்கு 10%, அதிகபட்சமாக ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி

30. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.12,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு  வட்டியுடன் சேர்த்து 3 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

கரும்பு சாகுபடிக்கு புத்துயிரூட்டும் திட்டம்

31. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் கடந்த 11 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. 2020 - 21ஆம் ஆண்டில் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 6.52 லட்சம் டன்னுக்கும் குறைவு ஆகும். இந்த நிலையை மாற்றி, அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

32. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய ரூ.1,500 கோடி வரும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கும்.

33. சர்க்கரை ஆலைகளின் பிற கடன்களை சமாளிப்பதற்காக அவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து குறைந்த வட்டியில் தமிழக அரசு கடன் பெற்றுத்தரும்.

34. உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் 10% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு, கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை மேம்பட, மேம்பட கரும்புக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்படும். இதை அரசு கண்காணிக்கும்.

சிறப்புத் திட்டம்

35. வேளாண்மையை இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற சிறப்புத் திட்டம்செயல்படுத்தப்படும்.

36. மழை, வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, அவற்றுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நிரந்தர தீர்வுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்க வகை செய்யப்படும்.

37. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000, கரும்புக்கு ரூ.90,000, நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

38. பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

காலநிலை மாற்ற அவசரநிலை

39. காலநிலை மாற்ற அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை சமாளிப்பதற்கான செயல்திட்டம் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படும்.

40. காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக திறன்மிகு வேளாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

41. காலநிலைக்கு ஏற்ற திறன்மிகு வேளாண்மை முறையை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக வேளாண்மை, சுற்றுச்சூழல், வருவாய், நிதி ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.

வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்

42. விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.

43. வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஊழவர் சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

44. பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு இலாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.

Also Read | ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ₹3 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்

45. தமிழ்நாட்டில் உள்ள உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவுதானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.  இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.

46. 2021-22 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.3,000 என நிர்ணயிக்கப்படும்.

47. வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குழு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

48. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

49. வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.

50. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதன் மூலம், கோடைக்காலங்களிலும் விவசாயம் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் புரட்சிகரமான நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
51. இதற்காக அனைத்து சிற்றாறுகள் மற்றும் ஓடைகளை அரை கிலோமீட்டருக்கு ஒரு சிறிய தடுப்பணை அமைத்து, அவற்றில் 200 அடி ஆழத்திற்கு நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்படும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கோடைக்கால சாகுபடிக்கு உதவியாக இருக்கும்.

காவிரி & கோதாவரி இணைப்பு - விரிவான திட்ட அறிக்கை தயார்

52. தமிழ்நாட்டின் நீர்ப்பாசன கட்டமைப்பு வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய காவிரி - கோதாவரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

53. காவிரி - கோதாவரி இணைப்புக்குத் தேவையான பிற அனுமதிகள் பெறப்பட்டு, 2022ஆம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

54. மேட்டூர் உபரிநீர்த் திட்டம் செயல்படுத்தி முடிக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதனால் போதிய பயன் கிடைக்காது. அதனால் மேட்டூர் உபரிநீர்த் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம்

55. 2021-22 ஆம் ஆண்டு முதல் 2024-25 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து  50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டம்

56. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்: கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறுமையைப் போக்குவதற்காக  69 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட திட்டம் தான் காவிரி& குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும்.  காவிரி, அக்கினியாறு, கோரையாறு, பாம்பாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை ரூ.14,400 கோடி செலவில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

57. இத்திட்டத்தின் முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் ரூ.6,941 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும்.

58. அத்திக்கடவு -அவினாசி திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு & அவினாசி திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும்.

புதிய பாசனத் திட்டங்கள்

59. பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

60. தாமிரபரணி & நம்பியாறு இணைப்புத் திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்கு நேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

61. தென்பெண்ணை & துரிஞ்சலாறு இணைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Also Read | சென்னை SBI ATM இயந்திரங்களில் பணத் திருட்டு; மற்றொருவர் கைது

கொள்ளிடம் தடுப்பணை 6 மாதங்களில் நிறைவடையும்

62. கொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் 71% நிறைவடைந்துள்ளன. அடுத்த 6 மாதங்களில் இப்பணிகள் முடிவடையும். கொள்ளிடம் தடுப்பணை பகுதியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

63. காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்த அனுமதிக்கப்படாது.

64. மாவட்டம் தோறும் வேளாண்மை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையும் வேளாண் பொருட்களைச் சார்ந்து இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். உற்பத்தியில் தொடங்கி, மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி வரை அனைத்துப் பணிகளும் இங்கு நடைபெறும். இதன் மூலம் அப்பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

வேளாண் சட்டங்கள் - அரசின் நிலை

65. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் உழவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்று தமிழக அரசு கருதுகிறது.

66. வேளாண் சட்டங்கள் தொடர்பாக உழவர் அமைப்புகளின் தலைவர்களை மத்திய அரசு நேரடியாக அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

மணல் குவாரிகள் மூடல்

67. தமிழ்நாட்டில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும். அதனால் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எம்.சாண்ட் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

68. தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதற்கு சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்படும்.

69. வெளிநாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

70. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்ட யூகலெப்டஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கப்படும்.

71. அழிந்து வரும் கற்பக விருட்சமாம் பனை மரங்களை வெட்டத் தடை விதிக்கப்படும்.

72. தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

Also Read | Tamil Nadu: இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் - 2 புதிய அமைச்சகங்கள்

73. தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறையிலிருந்து நீர்வளத்துறை பிரிக்கப்பட்டு, அதற்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

74. வேளாண் துறை 3ஆக பிரிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.

75. வேளாண்மை சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் முதலமைச்சர் தலைமையில் வேளாண் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும். இதில் வேளாண்மை சார்ந்த 7 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்.

76. தில்லி, பெங்களூருவில் செயல்படுவது போன்று திருச்சியில், சஃபல் சந்தை (safal market) தொடங்கப்படும். இதன் மூலம் விளைப்பொருட்களை மின்னணு ஏலமுறையில் விற்பனை செய்யப்படும்.

77. வட்டம் மற்றும் மாவட்ட அளவில் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த கூட்டமைப்பின் தலைமைக் குழு அன்றாடம் அந்த வட்டத்தில் அறுவடையாகும் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும். அந்த கூட்டமைப்பு மூலமாகவே விற்பனைகள் செயல்படுத்தப்படும்.

78. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும். நகரங்களில் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பதற்கு தனி அங்காடிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

இலவச பேருந்து வசதி

79. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.

80. உழவர்கள் தாங்கள் விளைவித்தப் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக, இரவு 8 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

81. தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

82. நாட்டுக் கோழிகள், ஆடுகள், வான் கோழிகள் போன்றவை கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் மூலம் வளர்க்கப்பட்டு பட்டதாரி இளைஞர் குழுக்கள் மற்றும் கூட்டுறவுத் துறை பங்களிப்புடன் முக்கிய நகரங்கள், சாலையோர உணவகங்கள் அமைக்கப்பட்டு கிராமங்களில் ஒரே இடத்தில் அனைத்தும் சமைக்கப்பட்டு கூட்டுறவு முறை உணவகங்களுக்கு ஒரே ருசியில் வழங்கப்படும்.

83. சாலையோரங்களில் கூட்டுறவு உணவகங்கள் மூலம் தரமான உணவு, மலிவான விலையில் வழங்கப்படுவதால், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோர் தரமற்ற, சுகாதாரமற்ற, சுவையற்ற உணவுகளை அதிக விலைகொடுத்து உண்ணும் அவலநிலை மாறும்.

84. புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்புச் சத்து குறைந்த இறைச்சியான முயல் கறியை பிரபலப்படுத்தி, அதிக கொழுப்புச் சத்து மிகுந்த ஆடு, மாடு இறைச்சியின் பயன்பாடு குறைக்கப்படும்.

85. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும். உழவர்கள் தாங்கள் விரும்பும் மாடுகள் எண்ணிக்கையில் வாங்கி மாட்டுப் பண்ணைகளில் ஒப்படைத்து விட்டால், அவர்களே 1000 மாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்து அதில் கிடைக்கும் பாலினை உள்நாட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் அதிக வருவாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

86. உழவர்களின் நிலங்களில் அவர்களின் நில அளவுக்கு ஏற்றாற்போல் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

87. தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

88. வேளாண் வருமானத்தை பெருக்கத் திட்டம்: உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 மானியம் வழங்குதல்,  நிலங்களின் அளவுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்க வகை செய்தல், துல்லிய பண்னைத் திட்டத்தின் (Pricision Farming) மூலம் வருவாயை பெருக்குதல், உழவர்களுக்கு கடன் வழங்க நபார்டு வங்கியில் தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

89. வருவாய் வாய்ப்புகளை விரிவாக்க வேளாண்மையை மறுவரையறை செய்தல்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, கடலோரப்பயிர் வளர்ப்பு, பால்பொருள் உற்பத்தி, கோழி வளர்ப்பு ஆகியவற்றை செய்தல், தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல், மதிப்பு கூட்டு பணிகளை செய்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல்.

90. வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல்: நவீன தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல், அறிவியல் அடிப்படையிலான பண்ணை மேலாண்மை ஆகியவற்றின் மூலம் அதிக விளைச்சல், சிறந்த தரம், தகுதியான விலை ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையில், வேளாண்மையை ஒரு தொழில்வடிவமாக்குவதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.

91. தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் நிலம் குவிப்பதைத் தடுப்பது, நிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள், நிலைத்த ஆற்றல் வேளாண்மை (Sustainable Agriculture) செயல்பாட்டுக்கான பகுதிகள், தொழில்துறை பயன்பாடு மற்றும் வேளாண்மை சாராத பயன்பாட்டுக்கான பகுதிகள் என பிரித்தல், இவற்றில் கடைசி பகுதி தவிர மீதமுள்ள அனைத்துப் பகுதிகளையும் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

92. முதல்நிலை வேளாண்மையை மாற்றியமைத்தல்: மண்வள நிலைகுறித்த வரைபடம் தயாரிக்கப்படும், சிறு-குறு நிலங்களின் மண்வளத்தை மீட்டெடுத்தல், அவற்றின் அடிப்படையில்  எந்தப் பகுதியில் எந்தப் பயிரை அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானித்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

93. விரிவாக்க செயல்பாடுகளை ஊரக வளர்ச்சியுடன் இணைத்தல்: நபார்டு வங்கியால் அமைக்கப்பட்ட ஊரக வணிக நடுவத்தின் மூலம் சந்தை மற்றும் தொழில் நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண்பது தான் இந்த கொள்கையின் அடிப்படை ஆகும்.

94. உணவு தன்னிறைவு: உபரி விளைச்சலை இழப்பாக மாறாமல் தடுத்தல், விலை மாற்றங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு தானியத்தின் விலைகள் நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவையே உணவு தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான உத்திகளாக இருக்கும்.

95. ஊரக பொருளாதார மறுமலர்ச்சிக்கான மும்முனைத் திட்டம்: சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்களை (Special Agro- Economic Zone) அமைத்தல், கைவினைஞர்களின் தொழிற்பட்டறைத் தொகுப்புகளை அமைத்தல், ஊரகத் தகவல் தொடர்பு முன்முயற்சிகள்  ஆகியவையே வளர்ச்சிக்கான மும்முனை திட்டங்கள்.

96. வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 75 தலைப்புகளில் 281 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி  இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக  அரசின் முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

Also Read | டெல்டா பிளஸ் தொற்று பரவல்; தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News