ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை டிச.31க்குள் சென்னை மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளது...
வரும் 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இது சமூக மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்பப் பயன்படும் பைகள்/பொட்டலங்கள், பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் 1.1.2019 முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து அவர்களது பகுதிக்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது வீடு, அலுவலகம், தொழிற்கூடங்கள், வியாபார நிர்வனங்கள் மற்றும் உணவு விடுதிகள் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தங்களது பகுதிக்குட்பட்ட வார்டு அலுவலங்களில் 31.12.2018 திங்கட்கிழமைக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1.1.2019 முதல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மண்டல அலுவலர், செயற்பொறியாளர், மண்டல சுகாதார அலுவலர், உதவி வருவாய் அலுவலர், வட்டாட்சியர், உதவி காவல் ஆணையாளர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு குழுவும், கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புர ஆய்வாளர் மற்றும் வரிவசூலிப்பாளர் ஆகியோரைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த சிறப்புக்குழுக்களால் பொதுமக்கள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடையே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.
வீடுகள்தோறும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநாகராட்சி பணியாளர்களால் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மற்றும் வியாபார நிறுவனங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தார் சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படும்.
இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி/காகிதம்/சணல் பைகள், காகித/துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒதுழைப்பை அளிக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.