திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருப்பதற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) ஆகியோருக்கு பாதுகாவலாக இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை மத்திய அரசு திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு “ஒய்+” வகுப்பு (Y+) பாதுகாப்பும், அதேசமயம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு “இசட்+” (Z+) பாதுகாப்பு இருந்தது. இவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF - சிஆர்பிஎஃப்) கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வந்தது. நாடு முழுவதும் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் விஐபி பாதுகாப்பை துணை ராணுவ இயக்கம் மூலம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
கடந்த 6 ஆம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகளுடன், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது. அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட "இசட் பிரிவு" பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்துள்ள அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு இணையான பாதுகாப்பை தமிழக போலீஸ் தரப்பில் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில்,
தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகியோரின் லட்சியங்களுக்கு எதிராகவும், திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலினே சரியான எதிர்ப்பைக் காட்டி வருவதாகவும், இதனால் மக்கள் செல்வாக்கு நாளும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் சிலை உடைப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ள வைகோ, மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது என்றும், ஆதலால் இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.