வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்: முதல்வருக்கு வைகோ பாராட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2021, 03:02 PM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்: முதல்வருக்கு வைகோ பாராட்டு title=

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக திமுக (DMK) தலைவரும் தமிழக முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக (MDMK) பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

"ஒன்றிய பா.ஜ.க. அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளை காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் கடந்த 2020 நவம்பர் 26 முதல் இன்றைய நாள் வரையில் 277 நாட்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்(Farmers)வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள்.

இந்திய விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கொந்தளிப்பை அலட்சிப்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கு (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், வேளாண் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களும் இந்தியாவில் வேளாண் தொழிலையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வழி வகை செய்கிறது.

வேளாண்துறை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் பெரு நிறுவனங்களிடம் போய்விடும் அபாயம் உருவாகி உள்ளது.

வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் இச்சட்டங்கள் உறுதிப்படுத்தவில்லை.

ALSO READ: உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்? - சீமான்

வேளாண் விளை பொருள் சந்தை முழுக்க முழுக்க பன்னாட்டு உள்நாட்டு பெரு நிறுவனங்களின் பிடியில் சென்றுவிடும்.

மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் பகைச் சட்டங்களும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது ஆகும்.

இந்நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்டு 28 ஆம் நாள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் பகைச் சட்டங்களை இரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் வெற்றி கிட்டும் வரை போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பக்கம் தி.மு.க. அரசு நிற்கும் என்பதற்கு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் சான்றாக இருக்கிறது.

இதனிடையே அரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தொகுதியான கர்னலில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது அரியாணா காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட கொடூர தாக்குதலால் விவசாயிகள் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். அடக்குமுறை மூலம் விவசாயிகளை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காணுகிற அரியாணா அரசுக்கும், அலட்சியப்படுத்துதல் மூலம் இத்தகைய அறப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் என்று நினைக்கின்ற நரேந்திர மோடி அரசுக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: காலநிலை மாற்றத்தால் மதுரை அதிகம் பாதிக்கப்படும் என முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News