திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றிப்பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது!
கடந்த 2016-ஆம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரி திமுக-வின் சரவணன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்புமனுவோடு இணைக்கப்பட்ட படிவங்களில் பொதுச் செயலாளர் என்ற வகையில் ஜெயலலிதாவின் கையெழுத்திற்கு பதில் கைரேகை இடம்பெற்றிருந்தது. இந்த கைரேகே ஜெயலலிதாவிடம் இருந்து முறையாக பெறவில்லை என தெரிவித்து தொடரப்பட்ட இந்த வழக்கில், இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஏ.கே.போஸின் வேட்புமனுவையும், அவரது வெற்றியையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இந்த வழக்கின் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நீதிபதி வேல்முருகன், 2016 திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்துள்ளார். மேலும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என் கோரி திமுக-வின் சரவணன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏ.கே.போஸ், மாரடைப்பால் உயிரிழந்தார். எனினும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றிப்பெற்றது செல்லாது என திமுக-வின் சரவணன் தொடர்ந்த வழக்கை காரணம் காட்டி இத்தொகுதியில் இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், திருப்பரம்குன்றம் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில் நேற்றைய தினம் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.