கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-செல்வி தம்பதியரின் 17 வயது மகள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ந்தேதி அதிகாலை நேரத்தில், மாணவி அவர் தங்கி இருந்த விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் கொடுத்தது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
4வது நாளான நேற்றைய தினம் அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்று 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது
இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கலவரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த தீபக், சூர்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளித்தது யார் என்று கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டினர். பிரேத பரிசோதனைக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.மேலும் சமூக வலைதளங்கள் சுயேச்சையாக விசாரணை நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் இதுபோன்ற இயற்கைக்கு முரணான இறப்புகளை சிபிசிஐடி-தான் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும் பிரேத பரிசோதனையின் போது தந்தை அவரது வக்கீலுடன் உடன் இருக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். பிரேத பரிசோதனைக்கு பின் வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை அவரது தந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டதுடன் இந்த வழக்கின் விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ