பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிப்பில்லாத வகையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டு உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பு முறை இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், வரிச் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்திலும் இந்தச் சட்டம் அமைந்தாலும், இதனை அமல்படுத்துவதால் எந்தவொரு தரப்பினைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
கடந்த 3.8.2016 அன்று சரக்கு மற்றும் சேவை வரிச் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து, பேசிய மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அவர்கள், “இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் மாநிலங்கள் தங்கள் அதிகாரங்களை யாருக்கோ விட்டுக் கொடுக்கப் போவதில்லை. மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து சிறந்த வரிவிதிப்பு முறையை கொண்டு வர முயற்சி செய்யும் போது, நாட்டின் நலன் கருதி அதை ஏற்றுக் கொள்ளலாம்”, என்றரீதியில் கருத்து தெரிவித்ததை இந்தநேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாட்டின் நலன் கருதி, அந்த நல்லெண்ணத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இதுவரை மாநில நிதியமைச்சர்க ளுடன் 15 கூட்டங்களை நடத்தியிருக்கின்ற மத்திய நிதியமைச்சர், பல்வேறு பொருட்களுக்கான வரிகளை அறிவித்து வருகிறார். 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில், 1200க்கும் மேற்பட்ட பொருள்களுக்கான வரிவிதிப்பு முறைகளையும், சட்டத்தை அமல் படுத்துவதற்கான நடைமுறை களையும் வகுத்திருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தில் இருக்கும் மக்கள் மத்தியில், “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்” மூலம், தாங்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டி ருக்கிறது.
குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள், ஹோட்டல்கள், வட்டார மொழி சினிமா, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளி தொழில், பீடி தொழில், தங்க நகை செய்யும் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வரி விகிதத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இவை ஒருபுறமிருக்க, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமலுக்கு வருவதால் விலைவாசி உயரும் என்று வணிகர் சங்கங்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகிறார்கள். வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள், முன்பு இருந்ததை விட இப்போது குறைவாக உள்ளன என்று நுகர்வோர் அமைப்பினர் கருத்து தெரிவித்து உள்ளார்கள். இதனால் கடும் விலைவாசி உயர்வை சந்திக்க நேரிடுமோ என்ற கவலை அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.
“செப்டம்பர் 2017க்குள் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும்”, என்று ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
ஆனால் இப்போது இவ்வளவு கவலைகளும், அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலும் குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ள நிலையில், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக அமல்படுத்துவது பற்றி மத்திய நிதியமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி கருத்துக் கேட்பது போல், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால் பாதிக்கப் படுவோம் என்று அச்சம் கொண்டுள்ள வர்களையும் அழைத்துப் பேசி, எந்தத்தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆகவே, அதற்குரிய கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஜூலை மாதம் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை”, தள்ளிவைக்க வேண்டும் எனவும், அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி மக்களின் கவலையை நீக்கி, ஏற்கனவே நிதியமைச்சர் அறிவித்தது போல் செப்டம்பர் மாதத்திலேயே “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை” அமல்படுத்துமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.