கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்ததில் காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூல பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் இது தீவிரவாத சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் பலரிடம் எழுந்திருக்கிறது. இதற்கிடையே ஜமேசா முபின் வீட்டின் அருகில் இருக்கும் சிசிடிவியை காவல் துறையினர் ஆய்வு செய்ததில், ஐந்து பேர் முபின் வீட்டிலிருந்து ஒரு மூட்டையை எடுத்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை கிளப்பியது.
நிலைமை இப்படியிருக்க கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன்,முகமது ரியாஸ்,பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் முபின் என்ற நபர் தீக்காயங்களுடன் இறந்தார். உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அப்பகுதியில் காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தடயங்களை பாதுகாத்து அறிவியல் பூர்வமாக அனைத்து புலன் விசாரணையும் நடந்து வருகிறது.
12 மணி நேரத்தில் உயிரிழந்த நபரை கண்டறிந்தோம். வெடித்து சிதறிய கார் 10 பேரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு சதி,இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சந்தேகப்படும் நபர்களை விசாரித்தும், அவர்களின் வீடுகளை சோதனை செய்தும், அவர்களை கண்காணித்தும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுவரை நடந்த புலன் விசாரணை அடிப்படையில் முபின் காரில் வந்தபோது,அப்பகுதியில் காவல் துறை பீட் இருந்ததால் தப்பிச் செல்ல முயன்றபோது சிலிண்டர் வெடித்து இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.இதில் வேறு யார், யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் கேரளா சென்று வந்துள்ளார்.எதற்காக சென்று வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்.
யூகங்கள் அடிப்படையில் பல தகவல்கள் சென்ன்றுகொண்டிருக்கின்றன.தடயவியல் ரிப்போர்ட் வந்த பின்பு முழுமையாக தகவல் கிடைக்கும். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரை என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது. முபின் வீட்டில் இருந்து இரண்டு சிலிண்டர்கள்,3 கேன் டிரம்கள் உள்ளிட்டவை காரில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதில் என்ன பொருட்கள் இருந்தது என்பது குறித்தும் விரைவில் தெரியவரும். கோவை மாநகரில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ