CAA-நாட்டைச் சூழ்ந்துள்ள பெருந்தீங்கு -தொல்.திருமாவளவன்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் – தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

Last Updated : Dec 31, 2019, 04:35 PM IST
CAA-நாட்டைச் சூழ்ந்துள்ள பெருந்தீங்கு -தொல்.திருமாவளவன்... title=

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் – தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., குடியுரிமைத் திருத்தச் சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு(என்பிஆர்) ஆகியற்றை எதிர்த்துக் கட்சிசார்பற்ற வெகுமக்களும் இலட்சக்கணக்கில் பங்கேற்கும் அறபோராட்டங்கள் நாடு தழுவிய அளவில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாடே கொந்தளித்துள்ள இச்சூழலில், ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடக்கூடாது; பாஜக ஃபாசிச அரசுக்கு எதிரான தற்போதைய போர்க்கனல் தணிந்துவிடக்கூடாது என்கிற கவலை மேலோங்குகிறது. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் இன்று இந்திய நாட்டைச் சூழ்ந்திருக்கும் பேராபத்தை உணர்ந்து, விடுதலைச்சிறுத்தைகளும் இதர ஜனநாயக சக்திகளும் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது நலமென கேட்டுக்கொள்கிறேன்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் எதிரானது அல்ல; அது ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. மதச்சார்பின்மை கோட்பாட்டை வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இச்சட்டங்களின் மூலம் மதவாதத்தையும் வெறுப்பையும் மக்களிடம் பரப்பி மக்களைக் கூறுபோடும் சதிமுயற்சியை முறியடித்து, மதச்சார்பின்மையையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது சனநாயகச் சக்திகளின் கடமையாகும்.

எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தேசத்தையும் பாதுகாக்கும் வகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஏற்படவுள்ள கொடிய விளைவுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், ஆங்காங்கே அறப்போராட்டங்களில் பங்கேற்பதுடன் நமது வலுவான எதிர்ப்பை சமூகஊடகங்களிலும் தொடர்பரப்புரையாக மேற்கொள்ளவேண்டியது இன்றியமையாத தேவையென்பதை விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்நிலையில், மக்கள் போராட்டங்களின் வேகத்தையும் வீரியத்தையும் வலுவிழக்கச் செய்வதற்கு, திசைத்திருப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்பதால் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்க்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News