எத்தனை சாதனைகளைச் செய்தாலும் பெயர் என்னவோ சாதிக் கட்சிதான் - அன்புமணி வேதனை

PMK Leader Anbumani : பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்.! வரும் 2026ம் ஆண்டுத் தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி - டாக்டர் ராமதாஸ் சூளுரை 

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 28, 2022, 08:01 PM IST
  • 2026ல் அன்புமணி தலைமையில் ஆட்சி உறுதி - ராமதாஸ்
  • பாமக தோற்பதற்கு தொண்டர்களே காரணம் - ராமதாஸ்
  • எத்தனை சாதனை செய்தாலும் பாமகவுக்கு சாதிப்பெயர் - அன்புமணி
எத்தனை சாதனைகளைச் செய்தாலும் பெயர் என்னவோ சாதிக் கட்சிதான் - அன்புமணி வேதனை title=

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அருகே உள்ள திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டு காலம் பாமகவின் தலைவராக இருந்த ஜி.கே.மணிக்கு கவுரவத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாமகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியை, அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்தி சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பாமகவுக்குத் தந்துள்ளேன் என்றார். இனிவரும் காலம் பாமகவின் காலம் என்றும், தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026ம் ஆண்டுத் தேர்தலில் அன்புமணி தலைமையில் பாமக ஆட்சி அமைவது உறுதி என்றும் ராமதாஸ் கூறினார். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சித் தொடங்கி ஒரே ஆண்டில் ஆட்சியைப் பிடித்ததை சுட்டிக்காட்டிய அவர், நம்மால் ஏன் இது முடியவில்லை என்று கேள்வி கேள்வினார். 

மேலும் படிக்க | பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சரின் அட்வைஸ்

பாமகவின் கொள்கைகளைப் போல நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கு உண்டு என்று கேள்வி எழுப்பிய ராமதாஸ், ஆனால் கட்சி தொடங்கிய போது இருந்த 4 எம்.எல்.ஏ சீட் ஏன் இப்போது 40ஆக மாறவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். பாமக வெற்றி பெறாததற்கு தொண்டர்களே காரணம் என்றும், 25 ஆண்டுகள் கட்சி நடத்தியும் 5 சீட்டுகள் மட்டுமே வெல்ல முடிந்ததற்கு தொண்டர்களே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். 100 வாக்குகளை வாங்கி, பதவி எதுவும் வேண்டாம் என்று உழைத்து அன்புமணியை முதலமைச்சர் ஆக்குபவனே பாமகவின் உண்மையான தொண்டன் என்றும் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், அதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதியதோர் தமிழகம் செய்வோம் என்று சூளுரைத்தார். எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் பாமகவுக்கு சாதிக்கட்சி என்ற பெயர் இருப்பதாகவும், அந்த மாயையை உடைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார். அனைத்து சமூக மக்களும் பாமகவில் இருப்பதாகவும், பாமகவின் அடிப்படையே சமூக நீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சி என்றும் தெரிவித்தார்.

உலகத் தலைவரான அம்பேத்கரை குறுகிய வட்டத்திற்குள் அடைத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் தலைவராக ஆக்கப்பட்டிருப்பதாக கூறிய அன்புமணி, அதேபோல இந்தியாவின் தலைவராக வரக்கூடிய ராமதாஸை சாதித் தலைவராக ஆக்கியிருப்பதாக தெரிவித்தார். ஒரு சொட்டு மது இல்லாத, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதுதான் தனது லட்சியம் என்றும், இலவசத்துடன் கூடிய தரமான கட்டாய கல்வி அளிப்பது, தரமான மருத்துவ வசதி அளிப்பது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவையே தனது லட்சியம் என்றும் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தார். 

மேலும் படிக்க |மாமூல் கேட்டு வணிகர் கொலை... கட்டுப்படுத்துமா காவல் துறை? - ராமதாஸ் கேள்வி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News