தமிழக காவல்துறையில் இனி கடித பரிமாற்றம் உட்பட அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என தமிழக DGP திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறை வாகனங்கள் அனைத்திலும் தமிழில், "காவல் துறை" என இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும், வருகைப் பதிவேட்டில் கூட அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என திரிபாதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காவல்துறையில் தமிழ் பன்பாடு குறித்து DGP திரிபாதிக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் அனுப்பிய அறிக்கையை அடுத்து, காவல்நிலையங்களுக்கு DGP திரிபாதி இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவல்துறை தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும். காவல்நிலையங்களில் இருக்கும் வருகை பதிவேட்டிலும் காவல்துறையினர் இனி தமிழில் கையொப்பம் இட வேண்டும். அனைத்து கடிதப் பரிமாற்றங்களுயும் தமிழ் மொழியிலேயே செய்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையின் அனைத்து அலுவலக கோப்புகளையும் தமிழில் தான் பராமரிக்க வேண்டும்., காவல்துறையின் வாகனங்களில் காவல் என்று தமிழில் தான் எழுதியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு துறைகளில் தமிழ் மொழி சிறிது சிறிதாய் மறுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக காவல்துறையில் தமிழை வளர்க்க தலைமை மேற்கொண்டுள்ள நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.