பாலியல் குற்றச்சாட்டு : ஜாமீன் மறுப்பு, கிரிக்கெட்டில் இருந்து சஸ்பெண்ட் - சர்ச்சை மன்னன் குணதிலகா!

பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை வீரர் குணதிலகாவை அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 7, 2022, 02:42 PM IST
  • குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் மறுப்பு.
  • ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் குணதிலகா மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்.
  • பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் குணதிலகா கைது
பாலியல் குற்றச்சாட்டு : ஜாமீன் மறுப்பு, கிரிக்கெட்டில் இருந்து சஸ்பெண்ட் - சர்ச்சை மன்னன் குணதிலகா! title=

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா, அவர் மீது அளிக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை அடுத்து ஆஸ்திரேலியாவில் நேற்று (நவ. 7) கைது செய்யப்பட்டார். நடைபெற்று வரும் ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின்போது, ஆஸ்திரேலியாவில் பெண்ணிடம், பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், குணதிலகாவை அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக, அவருக்கு ஜாமீன் வழங்கவும் ஆஸ்திரேலிய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அதிரடி சஸ்பெண்ட்

குணதிலகா கைதுசெய்யப்பட்டது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில், இலங்கை வீரர் குணதிலகா கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனுஷ்க குணதிலகாவை அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக இடைநிக்கம் செய்வதுடன், இனி அவரை எந்தவித அணி தேர்வுக்கும் பரிசீலிக்கப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. 

மேலும் படிக்க | உலகக் கோப்பையில் பரபரப்பு! பாலியல் குற்றச்சாட்டில் முக்கிய வீரர் ஆஸ்திரேலியாவில் கைது!

மேலும், அவர் மீது வைக்கப்பட்டுள்ள, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் எடுக்கும். மேலும் ஆஸ்திரேலியா நீதிமன்றம் இவ்வழக்கு முடிவுக்கு வந்ததும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் ஒரு வீரரின் இத்தகைய நடத்தைக்கு ஒரு சதவீதம் கூட சகித்துக்கொள்ள மாட்டோம் என்றும் இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரவித்துள்ளது. 

டேட்டிங் ஆப்பில் பழக்கம்

கைதுசெய்யப்பட்ட குணதிலகா, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் சில நாள்கள் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அரையிறுதிக்கு சுற்றுக்கு தகுதிபெறாத இலங்கை அணி, தொடரில் இருந்து வெளியேறியது. தொடர்ந்து, இலங்கை வீரர்கள் குணதிலகா இல்லாமல் நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டுவிட்டனர். சில அணி நிர்வாகிகள் மட்டும் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

குணதிலாகவுக்கு கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 31 வயதான குணதிலாக, இந்த தொடரில் நமீபியா உடனான குரூப் சுற்றுப்போட்டியில் மட்டுமே விளையாடிருந்தார். அதிலும், ரன் ஏதும் இன்றி ஆட்டமிழந்த அவர், காயம் காரணமாக தொடரில் விலகினார். இருப்பினும், இலங்கை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றதை அடுத்து, அவரும் அணியினருடனே இருந்துள்ளார். 

Danushka Gunathilaka

சர்ச்சைகள் இதுவரை....

மேலும், குணதிலாகாவும் இதுபோன்ற சர்ச்சைகளும், இடைநீக்கங்களும் புதிதில்லை. கடந்தாண்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, கரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறியதாக ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று வீரர்களில், குணதிலகாவும் ஒருவர் (மற்றவர்கள் குஷால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா). 

மேலும், அணி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 2018ஆம் ஆண்டிலும் குணதிலகாவை ஆறு மாதங்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட செய்திருந்தது. அதே ஆண்டில், குணதிலகாவின் நெருங்கிய நண்பர் ஒருவர், நார்வே பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, குணதிலகா சிறிது காலம் இடைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தோனி எனக்கு அனுப்பிய மெசேஜ் இது தான் - விராட் கோலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News