ஆன்மீக வழிபாட்டிற்கு சிறந்த மாதம் எது என்று கேட்டால் இந்தியர்கள் ஆடி மாதம் என்றே சொல்வார்கள். இது தென்னிந்தியாவில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் ஆடி மாத வழிபாடு மிகவும் பிரபலமானது. அதிலும், சிவனுக்கு முக்கியமான மாதம் ஆடி என்பது வட இந்திய நம்பிக்கை. நம் தமிழ்நாட்டிலோ ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடி பதினெட்டு, ஆடி பூரம், ஆடி பௌர்ணமி, நாக பஞ்சமி, வரலட்சுமி விரதம் என ஆடி மாதத்தில் திருவிழாக்களும் பூஜைகளும் களைகட்டும்.
இறை வழிபாட்டில் ஆடி மாதம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு, ஆடி மாதத்தில் தானம் செய்வதும் மிகவும் முக்கியமானது என இந்திய கலாச்சாரம் கூறுகிறது. ஆடியில் தானத்தை விதைத்தால் தலைமுறைகள் அதனை அறுவடை செய்யும்... ஆடியில் தானம் செய்வது வாழ்க்கையில் சந்தோஷத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்து மத நம்பிக்கைகளின் படி, ஓர் ஆண்டை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். அதாவது ஒரு நாளில் இரவு பகல் என்பதைப் போல, என்று சொல்லலாம். தை முதல் ஆனி வரையிலான 6 மாத காலம் உத்தராயனம் எனப்படுகிறது. இது தேவர்களுக்கு பகல் பொழுதாகும். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் எனப்படும் தேவர்களின் இரவுக் காலமாகும். ஆடி மாதம் தேவர்களின் மாலை காலமாகும்.
மேலும் படிக்க | சூரிய அஸ்தமனத்திற்கு பின்.. ‘இவற்றை’ தானம் செய்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்..!!
தேவர்களின் முன்மாலை நேரமாக கருதப்படும் ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே விசேஷமானவை என்றாலும், செவ்வாய் மற்றும் வெள்ளி அம்பாளுக்கு உரியதாகவும், ஆடி மாத திங்கட்கிழமைகள் சிவனுக்கு சிறப்பானதாகவும் கருதப்படுவதால், ஆடி மாதத்தில் பூஜைகளும் சடங்குகளும் செய்யப்படுகின்றன. ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்து மற்ற பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் அளிப்பார்கள்.
ஆடிப்பிறப்பு
ஆடி மாதத்தின் முதல் நாள் ஆடிப் பண்டிகை அல்லது ஆடிப்பிறப்பு என்று கொண்டாடப்படுகின்றது, ஆடி மாதப் பிறப்பு அன்று வீடுகளில் கன்னிமார் பூஜை செய்யும் வழக்கமும் உண்டு. அதேபோல, லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான விரதங்களில் ஒன்றான வரலட்சுமி பூஜை, ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் தான் வருகிறது. இந்த நாளில் வரலட்சுமி அம்மனுக்கு பூஜை, அலங்காரம் ஆராதனைகள் செய்வது வழக்கம்.
ஆடிப் பெருக்கு
ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கப்படும் ஆடி மாதத்தின் முக்கியமான இந்த நாள், மழை தரும் வருண தேவனுக்காக கொண்டாடப்படும் விழாவாகும். நீர்க் கடவுளை வழிபட மக்கள் நீர்நிலைகளுக்கு சென்று பூ தூவி, பூஜைகள் செய்வார்கள். மழை மற்றும் நீர் தான் உலகின் வாழ்விற்கு ஆதாரம் என்பதை குறிக்கும் பண்டிகை இது.
ஆடிப் பூரம்
ஆடிப்பூரம் என்பது ஆடி மாதம் வரும் பூர நட்சத்திர நாளைக் குறிக்கும். வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியாரின் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும் திருவிழா இது. சூடிக் கொடுத்த சுடர்கொடி என பெயர் பெற்ற கோதை நாச்சியாருக்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதேபோல, அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து, பெண்களுக்கு வளையல்கள் வழங்குவதும் ஆடிப்பூரத்தில் சிறப்பானதாகும்.
ஆடிக் கிருத்திகை
ஆடிக் கிருத்திகை என்பது தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். முருகனை சரவணப்பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த வளர்ப்புத் தாய்களான கார்த்திகைப் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆடிக் கிருத்திகையில், முருகனுக்கு விரதமிருந்து பூஜைகள் செய்வது வழக்கம்.
நாக பஞ்சமி
ஆடி மாதம் வரும் பஞ்சமி நாள், நாக பஞ்சமியாக அனுசரிக்கப்படுகிறது. பாம்பு புற்றுக்கு பால் ஊற்றும் முக்கியமான சடங்கு இந்த நாளில் செய்யப்படுகிறது. பாம்பின் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதால் நாக தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல நவகிரகங்களில் பாம்பு தலை மற்றும் உடலைக் கொண்ட நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவுக்கும், நாக பஞ்சமி நாளன்று பாலாபிஷேகம் செய்தால் ஜாதக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Lord Shiva: சிவ பூஜையில் செய்யக்கூடாத விஷயங்கள்: சிவனுக்கு உவப்பில்லா பொருட்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ