காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார்!
90's தமிழ் சினிமாவில் மெகா ஹீரோயினாக வலம் வந்த குஷ்பு, தற்போது சின்னத்திரைகளில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் 2014-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.
சமூகத்தின் மீதான தனது கருத்தினை பகிரங்கமாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அவ்வப்போது பகிர்ந்து வந்த அவர் தற்போது திடீரென தனது ட்விட்டர் கணக்கினை முடக்கியுள்ளார். கடந்த 2010 ஆண்டு தனது ட்விட்டர் கணக்கை தொடங்கியது முதல் தற்போது வரை 12 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட குஷ்பு தற்போது திடீரென தனது கணக்கை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பேசுவதால் ஏற்படும் விமர்சனங்களின் காரணமாகவே அவர் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
என்றபோதிலும் ட்விட்டர் பார்க்கும் போது தான், தானாக இல்லை என்றும், ஒரு சில காரணங்களால் எல்லோருக்கும் பதில் அளிக்க முடியவில்லை என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். பிரச்சனைகளுக்கு பயந்து தான் ட்விட்டரில் இருந்து வெளிவரவில்லை என்று உறுதிபடுத்தியுள்ள குஷ்பு, ட்விட்டரில் செலவிடும் நேரத்தின் காரணமாக தன் பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தனது ட்விட்டர் கணக்கை ஆக்டிவேட் செய்வது குறித்து முடிவு செய்யவில்லை என கூறிய குஷ்பு, தற்போதைக்கு ட்விட்டர் வர விருப்பம் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு குஷ்பு தனது ட்விட்டர் கணக்கை முடக்கி பின்னர் மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு ட்விட்டருக்கு திரும்பினார். தற்போது அவர் மீண்டும் தனது ட்விட்டர் கணக்கை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.