காதலியை தேடிப்பிடிக்க நீங்கள் டேட்டிங் ஆப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனால் வரக்கூடிய ஆபத்துகளை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
Dating app safety tips : இப்போதெல்லாம் டேட்டிங் ஆப் மூலம் காதல் துணையைத் தேடுவது சகஜமாகிவிட்டது. இது மேலோட்டமாக வசதியாக தெரிந்தாலும் மிகப்பெரிய ஆபத்துகளும் இதன் பின்னணியில் இருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
டேட்டிங் செயலிகளில் போலி யார் வேண்டுமானாலும் எளிதாக புரொபைல் உருவாக்கிக் கொள்ள முடியும். பலர் தங்கள் அடையாளத்தை மறைக்க அல்லது மற்றவர்களை ஏமாற்ற போலியாக புரொபைல்களை உருவாக்குகின்றனர். ஏமாற்றத்தின் முதல் புள்ளியே இங்கிருந்து தொடங்குகிறது.
நீங்கள் அந்த மோசடி புரொபைலை கண்டுபிடிக்கவில்லை என்றால் நிதி மோசடிகளில் சிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளும் இந்த செயலிகள் வழியாக நடைபெறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டேட்டிங் ஆப்ஸைப் பயன்படுத்தும் போது, பெயர், புகைப்படம், இருப்பிடம் மற்றும் பிற விஷயங்கள் அதாவது தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டும். இந்த விவரங்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பே இல்லை. ஹேக்கர்கள் கைக்கு நமது தனிப்பட்ட தகவல்கள் செல்லும்பட்சத்தில் ஆபத்து இன்னும் அதிகம்.
டேட்டிங் ஆப்களை பயன்படுத்தும் நிறுவனங்களும் நமது டேட்டாவை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் டேட்டிங் செயலிகளில் இணைய மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களும் வரும். பலர் மற்றவர்களைத் துன்புறுத்தவும், அவர்களை அச்சுறுத்தவும், கேவலமாக பேசவும் இந்த செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். இது தவிர, குறிப்பாக பெண்கள் இணைய மிரட்டலுக்கு பலியாகின்றனர், இது அவர்களின் பாதுகாப்பில் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தக்கூடும்.
கேட்ஃபிஷிங் என்பது ஒரு நபர் மற்றொரு நபரை ஏமாற்ற போலி சுயவிவரத்தைப் பயன்படுத்தும் ஒரு செயல்முறையாகும். இது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சில சமயங்களில் உடல் ரீதியான பாதிப்பாகவும் மாறலாம்.
டேட்டிங் ஆப்ஸில் அரட்டை அடிப்பதற்கும் நிஜ வாழ்க்கையில் பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தப் செயலிகளில், மக்கள் தங்கள் புகைப்படங்களையும் தகவலையும் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் கிடைக்கும் சந்தோஷம் நிஜ வாழ்க்கையில் கிடைக்காதபோது வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை உருவாக வாய்ப்பு இருக்கிறது.