ரன் மிஷின், சேஸ் மாஸ்டர் என பல பட்டப்பயர்களால் அழைக்கப்படும் விராட் கோலி, இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், கடந்த 14 வருடங்களாக இந்திய அணியின் முடிசூடா மன்னனாகவும், எதிரணிக்கு சிம்மசொப்பனமாகவும் விளங்குகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்கள் குறித்து இங்கு காணலாம்.
49 vs பாகிஸ்தான் (2016 ஆசியக்கோப்பை)... ஏன் இந்த போட்டி, விராட் கோலியின் சிறந்த இன்னிங்ஸின் பட்டியலில் இருக்கிறது? என்று நினைக்கலாம். ஆனால், அன்றைய தினம் பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்துவீச்சாளார் முகமது ஆமிர் வெறும் 8 ரன்களை கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தார். இதனால், இந்திய அணி 83 ரன்களுக்கு சுருண்டது. அந்த சூழலிலும், விராட் கோலி அடித்த 49 ரன்கள் என்பது என்றும் மறக்க முடியாதது.
82 vs பாகிஸ்தான் (2022 டி20 உலகக்கோப்பை)... டி20 உலகக்கோப்பை, மெல்போர்னில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விராட் கோலி ஆட்டமிழக்காமல் இறுதிவரை நின்று 82 ரன்களை குவித்து, வெற்றிக்கு பெரும்பங்காற்றினார். சேஸிங் மாஸ்டர் என விராட் கோலி தன்னை மீண்டும் நிரூபித்த போட்டி அது. தனது ஆகச்சிறந்த இன்னிங்ஸில் இதுவும் ஒன்று என விராட் கோலியே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
122 vs ஆப்கானிஸ்தான் (2022 ஆசியக்கோப்பை)... சுமார் 1021 நாள்களுக்கு பிறகு விராட் கோலி அடித்த அந்த சதம் தான் இந்த இன்னிங்ஸை வரலாற்றில் நிலைத்து நிற்க செய்தது. இரண்டரை ஆண்டு காலமாக அவர் ஃபார்ம் குறித்து எழுப்பப்பட்டு வந்த அத்தனை விமர்சனங்களுக்கும் ஒரே போட்டியில் பதிலடி கொடுத்தார், விராட்.
94 vs மேற்கிந்திய தீவுகள் (2019)... இந்தியாவுக்கு சுற்றுப்பணயம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் டி20 போட்டியில், இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 208 ரன்களை நிர்ணயித்தது. விராட் முதலில், 20 பந்துகளுக்கு 20 ரன்களை எடுத்து பொறுமை காட்டினார். பின்னர் கியரை மாற்றிய விராட் மொத்தம் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துவைத்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காதது குறிப்பிடத்தக்கது.
149 vs இங்கிலாந்து (2018)... 2018இல் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி (முதல் டெஸ்ட்) விராட் கோலிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 2014ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் சரியாக விளையாட இயலாத கோலி, 2018இல் ஆண்டர்சன், பிராட் என இரு ஜாம்பாவன்களையும் அடித்து துவைத்தார். இதுதான் இங்கிலாந்து மண்ணில் விராட் கோலியின் முதல் டெஸ்ட் சதமாகும்.