ICC World Cup 2023: கிரிக்கெட்டில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய தொடராக பார்க்கப்படும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைதான். அந்த வகையில், 13ஆவது உலகக் கோப்பை தொடர் வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடியவர்களை இங்கு காணலாம்.
பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவிலும் ஒரு உலகக் கோப்பையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பான திறனை வெளிப்படுத்திய அந்த 5 வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
இதுவரை 1975ஆம் ஆண்டில் தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை 12 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா 5 முறையும், மேற்கு இந்திய தீவுகள், இந்தியா தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தலா 1 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.
13ஆவது உலகக் கோப்பை தொடர் வரும் அக். 5ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதுவரையிலான 12 உலகக் கோப்பைகளில் சிறப்பாக விளையாடிய 5 வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
சச்சின் டெண்டுல்கர்: 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்கு மறக்க முடியாத தொடராகும். 1983 உலகக் கோப்பைக்கு பின் இறுதிப்போட்டி வரை இந்தியா தகுதி பெற்றிருந்தது. ஆனால், கோப்பை கைக்கு எட்டவில்லை. இந்தியாவுக்கு கோப்பை கிடைக்கவில்லை என்றாலும் சச்சின் அந்த தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். அந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்களை அவர் குவித்தார். அதில் ஒரு சதமும், ஆறு அரைசதமும் அடக்கம். குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 75 பந்துகளில் அவர் அடித்த 98 ரன்கள் இன்று வரையில் பலராலும் நினைவுக்கூறப்படுவதாக உள்ளது.
யுவராஜ் சிங்: ஒருபுறம் புற்றுநோய் உடன் போர் மறுபுறம், இந்தியாவின் 28 ஆண்டு கால கனவை நினைவாக்க போராட்டம் என இரண்டு இடங்களில் யுவராஜ் சிங் சமன் செய்துகொண்டிருந்தார், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில். அதில் இந்தியா கோப்பையையும் வென்றது, எதிர்காலத்தில் அந்த புற்றுநோயை வீழ்த்தி யுவராஜ் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அந்த தொடரில் அவர் 362 ரன்களையும், 15 விக்கெட்டுகளையும் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றார். இது அவரின் மறக்க இயலாத தொடராகும்.
மிட்செல் ஸ்டார்க்: 2015 மற்றும் 2019 ஆகிய இரு உலகக் கோப்பைகளில் ஸ்டார்க் விளையாடி உள்ளார். இதில் 2019இல் அவர் 10 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இவர் தற்போது மூன்றாவது முறையாக இந்த தொடரிலும் விளையாடுகிறார்.
ரோஹித் சர்மா: ரோஹித் சர்மாவுக்கு 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றும்போது, இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் 2015இல் இடம்பெற்றும் பெரிதாக இந்தியா அதில் சாதிக்கவில்லை. 2019 தொடரிலும் அப்படிதான் என்றாலும் அதில் ரோஹித் ஒரே தொடரில் 5 சதங்களை விளாசி தனக்கான தொடராக்கினார். அதில், 9 போட்டிகளில் விளையாடி 648 ரன்களை அவர் அடித்தார்.
ஷகிப் அல் ஹாசன்: வங்கதேசம் உலகக் கோப்பையில் அவ்வப்போது சில அதிர்ச்சி வெற்றிகளை பெற்று வந்தாலும், பெரிய அளவில் சோபித்ததில்லை. 2015ஆம் ஆண்டில் காலிறுதி ஆட்டம் வரை அவர்கள் தகுதிபெற்றிரு்தனர். ஆனால், வங்கதேச அணியின் தற்போதைய கேப்டன் ஷகிப் அல் ஹாசன் கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஒரு ஆல்-ரவுண்டராக அதிகபட்ச சாதனையை அவர் படைத்தார் எனலாம். அவர் 606 ரன்களையும், 11 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.